கொல்கத்தா அணி நேற்று மழையினால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை டக்வொர்த் லூயிஸ் முறையில் வீழ்த்தி ஆட்டத்தை முடிக்கும் போது மணி நள்ளிரவு 1.27. அதாவது வியாழன் அதிகாலையில்தான் போட்டி முடிந்துள்ளது. ஹைதராபாத் அணியை 128 ரன்களுக்கு மட்டுப்படுத்திய கொல்கத்தா போட்டியை எப்படியிருந்தாலும் வென்றிருக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், நேற்று 1.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை சடுதியில் கொல்கத்தா இழந்ததால் 128 ரன் இலக்கே தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற பாரவையையும் தவிர்ப்பதற்கில்லை. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் முற்றிலும் மழையாகப் போய் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தால் கொல்கத்தா அணி வெளியேறியிருக்கும் சன் ரைசர்ஸ் அடுத்த பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றிருக்கும். காரணம், புள்ளிகள் அட்டவணையில் சன்ரைசர்ஸ் 3-ம் இடத்திலும், கொல்கத்தா 4-ம் இடத்தில் இருந்தது, தங்களது கடைசி 2 லீக் போட்டிகளில் தோல்வி தழுவி டாப் 2 இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது.
ஐபிஎல் லீக் போட்டிகளுக்குரிய விதிமுறைகள் பிளே ஆப் சுற்றுக்கும் கடைபிடித்திருந்தால் கொல்கத்தா அணி வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் பிளே ஆப் சுற்றுக்கென்று பிரத்யேக விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது பிளே ஆஃப் சுற்றில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நள்ளிரவானாலும் மணி 12.26-க்கு நடத்தலாம் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆட்டம் உண்மையில் தொடங்கும் நேரத்திலிருந்து நான்கரை மணி நேரம் கழித்து 5 ஓவர்கள் போட்டியை நடத்தலாம் என்று உள்ளது. சூப்பர் ஓவர் வரை சென்றால் கூட 1.20 மணி வரை போட்டியை நடத்தி முடிவு காணலாம் என்று விதி செய்யப்பட்டுள்ளது. எனவேதான் ஆட்டம் முடிய இன்று அதிகாலை 1.27 மணி ஆனாலும் போட்டியை நடத்தி முடிவு காணப்பட்டது, இது கொல்கத்தாவுக்குச் சாதகமாக அமைந்தது.