மத்திய பிரதேச கல்வி அமைச்சரிடம், “பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரச்னையை கல்வித் துறை தீர்க்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது” என சில பெற்றோர்கள் புகார் கூறிய நிலையில், அவர்களை பார்த்து செத்துப்போ என சொல்லிவிட்டு அமைச்சர் காரில் புறப்பட்டு சென்றார்.
கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே இயங்குகின்றன. இதனால் பல மாநில நீதிமன்றங்கள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றமும் டியூஷன் கட்டணம் எனப்படும் கற்பித்தலுக்கான கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும், சீருடை, புத்தகம் போன்ற இதர கட்டணங்களை பெறக்கூடாது என உத்தரவிட்டது. ஆனாலும் பல தனியார் பள்ளிகள் கோர்ட் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலித்துள்ளன. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாநில பள்ளி கல்வி அமைச்சர் இந்தர் சிங் பரமரிடம், பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் தொடர்பாக புகார் தெரிவித்தனர். கல்வித் துறை தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது என ஒருவர் கேள்வி எழுப்ப, கடுப்பான அமைச்சர் ‘செத்துப்போ’ என கோபமாக கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அமைச்சரின் இச்செய்கை வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி கடும் விமர்சனத்தை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க., அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் வலியுறுத்தியுள்ளது.
Source Dinamalar