. -->

Now Online

FLASH NEWS


Monday 8 April 2019

மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு










மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தமிழக அரசின் மாநில கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டு, மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகளையும் தொடங்க அனுமதி கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் பழனியப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்


 இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது


ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழக அரசு கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது


மாநில அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழக பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகளையும் தொடங்க அனுமதிஅளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பழனியப்பன் மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தார்


அதில், "தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கக்கூடாது என சட்ட விதிகள் இல்லை. 2 பள்ளிகளுக்கும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும்


 ஆனால் மாநில பாட திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி மறுத்து அரசு உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது' என கூறப்பட்டு இருந்தது


இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் மத்திய அரசின் சிபிஎஸ்இ தலைவர் உள்ளிட்டோர் வரும் ஜூன் 6-க்குள் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்