. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 May 2019

புதிய பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க 1,199 விண்ணப்பங்கள்

நடப்பாண்டில் புதிய பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க, நாடு முழுவதிலுமிருந்து 1,199 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்திலிருந்து மட்டும் நூற்றுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான பணிகள் குறைந்த காரணத்தால், அந்த நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கை, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் வெகுவாகக் குறைந்து வந்தது. இதனால், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்தது. 
தமிழகத்தில் 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்சம் 5 பொறியியல் கல்லூரிகள் முதல் அதிகபட்சம் 20 கல்லூரிகள் வரை மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தி வந்தன.
100-க்கும் அதிகமான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைத்தன. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு முதல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகமான பணிகள் வர ஆரம்பித்தன.
இந்த நிறுவனங்களில் மீண்டும் பணிவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கணினி சார்ந்த பொறியியல் படிப்பு இடங்களை தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19 கல்வியாண்டில் மூன்று புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதேபோல், 2019-20-ஆம் கல்வியாண்டிலும் புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் ஏஐசிடி-யிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:
2019-20-ஆம் கல்வியாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்க நாடு முழுவதிலுமிருந்து 1,199 விண்ணப்பங்கள் ஏஐசிடிஇ-யிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், எம்பிஏ, எம்சிஏ போன்ற ஒரு படிப்பை (ஸ்டேன்ட் அலோன்) மட்டும் வழங்கும் கல்லூரிகள் தொடங்குவதற்கு என அனைத்து விண்ணப்பங்களும் அடங்கும். அதேபோல், கடந்த ஆண்டில் கடைசி நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும் இதனுடன் சேர்த்து பரிசீலித்து வருகிறோம். தமிழகத்திலிருந்து மட்டும் 80-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 
இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏஐசிடிஇ குழு நேரில் ஆய்வு நடத்திய பின்னர், தகுதி பெறும் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு அனுமதி இல்லை 
வரும் 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என ஏஐசிடிஇ முடிவெடுத்துள்ளது. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்க முடியாது. அதே நேரம், இந்த ஆண்டில் விண்ணப்பித்து, போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் பரிசீலிக்க அல்லது நேரடி ஆய்வு செய்ய இயலாத காரணத்தால் விடுபட்டிருக்கும் விண்ணப்பங்கள் மட்டும் 2020-21-ஆம் கல்வியாண்டில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.