. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

'250 மார்க்கா... கடைசியில் வாங்க'

250 மார்க்தானே... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... கடைசியில் அட்மிஷன் போட்டுக்கலாம்' என, சொல்லும் பள்ளிகளால், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 1 படிப்பில் சேரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூரில் மட்டும், பல தனியார் பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு முன், பிளஸ் 1 சேர்க்கை முடிக்கப்பட்டு விட்டது, தற்போது மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் விதிகளை பின்பற்றி, பிளஸ் 1க்கு விண்ணப்பம் பெறப்பட்டு, மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது.இதற்கிடையில், தமிழக அரசும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்க்கும்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாணவர்கள் விருப்பிய பாடங்களை கொடுக்க வேண்டுமெனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியது.இருப்பினும், சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க விருப்பம் காட்டு வதில்லை. பத்தாம் வகுப்பில், 250 மதிப்பெண்ணுக்கு குறைவாக இருந்தாலே, கடைசி நாளில் வரச்சொல்லி துரத்தி விடு கின்றனர். இதனால், விரும்பிய பள்ளிகளில், விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், பிளஸ் 1ல் மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவுகள் கொடுக்கப்பட வேண்டும். கலை மற்றும் கணினி அறிவியல் பிரிவுக்கு அதிக கிராக்கி உள்ளது.குறிப்பாக, 450 மதிப்பெண் வாங்கிய மாணவனும், 204 மதிப்பெண் வாங்கிய மாணவனும் இதே குரூப்பில் சேரவே விரும்புகின்றனர்.

சயின்ஸ் குரூப் வேண்டாம் என்கின்றனர். இந்த சமயங்களில் கொடுத்துதான் ஆக வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது தவறு,' என்றார்.பெற்றோர்கள் சிலர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், பிளஸ்1, பிளஸ்2 வகுப்பிலும் குறைவான மதிப்பெண்தான் வரும் என பள்ளி நிர்வாகம் முடிவுசெய்து விடுகிறது.இதனால், முதலில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு அட்மிஷன் போட்டு, 250க்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களை கடைசி நாளன்று வரச்சொல்கின்றனர். பல பள்ளிகளின் பதிலும் இதுவாகவே இருப்பதால், அட்மிஷன் கிடைக்காமல் தவிக்கின்றோம். மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்,' என்றனர்.
Source Dinamalar