. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றம்: ஒரு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை குறைப்பு?

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றத்தை கொண்டு வர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) முடிவெடுத்துள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட இடைவெளியில், தேர்வுகளில் புதிய புதிய மாற்றத்தை சிபிஎஸ்இ தொடர்ந்து புகுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக சிபிஎஸ்இ கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களை குறைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் கூறுகையில்,தேர்வுகளின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, அவ்வப்போது தேர்வுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
அடுத்த ஆண்டுக்கான தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக விரிவாக விடையளிக்கும் வினாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் புத்தாக்கத் திறனையும், விரிவாக எழுதும் திறனை வளர்க்கும் வகையிலும் இந்த மாற்றத்தை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக வினாத்தாளில் பெரிய மாற்றம் இல்லை. சிறிய அளவிலான மாற்றமே இருக்கும். அதனால் இதுகுறித்து மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம். வினாத்தாளில் செய்யவிருக்கும் மாற்றங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர், அந்த மாற்றங்களைக் கொண்ட மாதிரி வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதைக்கொண்டு மாணவர்கள் தேர்வின் முறையை புரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.