t> கல்விச்சுடர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 May 2019

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.
மேலும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இருவரின் புகைப்படம், நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை விவரம்) ஆகிய தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொது மன்னிப்பு கேட்பதோடு, இருவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அந்தப் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் வெளிவந்த தேர்வு முறைகேடு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றிய 30-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை பல்கலைக்கழகம் அதிரடியாக பணிநீக்கம் செய்ததோடு, தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்துவந்த பேராசிரியர்கள் கே.சுரேஷ், சி.குமார் சார்லி பால் ஆகிய இருவரின் பெயர், நிரந்தர கணக்கு எண், பேராசிரியர் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டு, இவர்கள் இருவரும் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட எந்தவொரு கல்விப்பணியிலும் இனி ஈடுபடவும், எந்தவொரு கல்லூரியும் இவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கவும் தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. 
இந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த இரு பேராசிரியர்களின் தனி விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள புகார் விவரம்:
நடவடிக்கை எடுக்கப்பட்ட இரு பேராசிரியர்களின் புகைப்படம், நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது, அவர்களையும், அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களையும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 499-க்கு எதிரானது மட்டுல்லாமல், குற்றமும் ஆகும். 
எனவே, அந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ள பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடையும் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL