t> கல்விச்சுடர் அரசுப் பள்ளிகளை முன்னெடுக்கும் முயற்சியே பயோ மெட்ரிக் வருகைப்பதிவு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 May 2019

அரசுப் பள்ளிகளை முன்னெடுக்கும் முயற்சியே பயோ மெட்ரிக் வருகைப்பதிவு!

தமிழ்நாட்டில் உள்ள மேனிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொட்டுணர் வருகைப் பதிவு முறை (Biometric Attendance System) கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வருகைப் பதிவு காரணமாக ஆசிரியர்களின் வருகை ஒவ்வொரு பள்ளியிலும் சீராகும் வாய்ப்புண்டு. மேலும், ஏனோதானோ வருகை, நீண்ட நாள்கள் வாராமை, பேருக்கு வருகைபுரிந்து சொந்த அலுவல் காரணமாக வெளியில் செல்லும் போக்குகள், அலுவலகப்பணி நிமித்தமாக பள்ளிக்கே வாராதிருத்தல், ஈராசிரியர் பள்ளிகளில் வாரநாள்களில் அதிகம் ஓராசிரியர் மட்டுமே பணியிலிருக்கும் அவல நிலை, தினசரி தாமத வருகைகள், மருத்துவ உள்ளிட்ட விடுப்புகளை முறையாகத் தெரிவிக்காமல் பள்ளிக்கு வராமை முதலான வருகை குறித்த ஒழுங்கீனங்கள் ஒழிய இது வழிவகுக்கும். 


காலை, மாலை வழிபாட்டுக் கூட்டங்களில் பெரும்பான்மையான பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் மாணவர்கள் காண்பது அரிதாகவே உள்ளது வேதனையளிக்கத் தக்க ஒன்று. முதல் கோணல் முற்றும் கோணல் போல தாமதமாகப் பள்ளிக்கு வரும் மாணவர்களை தாமதமாகவே பள்ளிக்கு வரும் ஆசிரியர் கண்டிப்பதென்பது நகைப்புக்குரியதாக ஆகிவிடுவதுண்டு. மாணவர்களுக்கு முன் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பதென்பது சாலச்சிறந்தது. சக ஆசிரியர்கள் வருகைக்கு முன் தலைமையாசிரியரின் வருகை அமைந்திடுதல் சிறப்பு. 
அரசுப்பள்ளிகள் மீதான பொதுமக்களின் பார்வை சீர்குலைந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது பள்ளிக்கு ஆசிரியர்கள் ஒழுங்காக வராமையே ஆகும். தொடர் தாமதமும் சீரற்ற வருகையும் அரசுப்பள்ளிகள் மீதான அவநம்பிக்கைகளை விதைத்து, நடுத்தர வர்க்க மக்களிடையே அந்நியப்பட்டு வருவதற்கு இன்றியமையாத காரணிகள் எனலாம். இன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி அடைந்ததற்கு மிக முக்கியப் பங்கு வகிப்பது ஆசிரியர் வருகையில் நிகழும் பல்வேறு குளறுபடிகள் என்பது மறுப்பதற்கில்லை.


கடைவிரித்தும் கொள்வாரில்லை என்று பிதற்றியவாறு தனியார் பள்ளி வளர்ச்சியைக் காரணம்காட்டித் தூற்றுவதென்பது நல்ல செயலல்ல. நாம் விரிக்கும் கடையில் தரம் அதிகமிருந்தால், நம் கடையைக் கடந்து காத தூரமுள்ள அடுத்தவர் கடையை நாடித்தேடிப் போகவேண்டிய அவசியம் பொதுமக்களுக்கு இருக்காது என்பது கல்வியாளர்களின் கருத்தாகும். இன்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக தனியார் மெட்ரிக் பள்ளிகளை விஞ்சி சேர்க்கையிலும் தரத்திலும் பல்வேறு அரசுப்பள்ளிகள் பீடுநடை போடுவதற்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களின் ஒழுங்கான வருகையானது முதன்மை பங்களிக்கும். 
நியாயமான, நேர்மையான காரணங்களுக்கு எப்போதும் விதிவிலக்கு உண்டு. அதேவேளையில், உண்மைப் புறம்பாக, ஒழுக்கக்கேடான செயல்களுக்குப் பள்ளியில் எப்போதும் இடமளிக்கக் கூடாது. பள்ளி வயதுப் பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைப்பது என்பது எளிதாகிவிட்டது. ஆசிரியர்களைப் பள்ளிக்கு தினசரி வரவைப்பது தான் பெரிய சவாலாக நடைமுறையில் இருந்து வருகிறது. கட்டாய வருகை என்பது மாணவருக்கு மட்டுமல்ல. ஆசிரியருக்கும் பொருந்தும்!


JOIN KALVICHUDAR CHANNEL