. -->

Now Online

FLASH NEWS


Saturday 10 August 2019

முளைப்பாரிக்குள் அறிவியல்! - எளிதில் புரியவைத்து அசத்தும் அரசுப் பள்ளி





உள்ளூர் கலை, கலாசாரம், விவசாயம் போன்றவை பாடத்திட்டங்களில் இடம்பெறும்போது, அவற்றை மாணவர்கள் நேரடியாக உணரும் வகையில் செயல்முறைப் பயிற்சி அளித்தால் மட்டுமே மாணவர்களின் ஆர்வமும் அதுபற்றிய அறிவும் பலமடங்கு விரிவடையும் என்கிறார்கள். அதை அழகாய் செயல்படுத்தி அசத்தியிருக்கிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள சேந்தன்குடி அரசு தொடக்கப்பள்ளி.


நான்காம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், ‘முளைப்பாரி திருவிழா’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பாடலை சொல்லிக்கொடுத்த பள்ளி ஆசிரியை, ஒரு புதுவிதமான சிந்தனையை உருவாக்கியிருக்கிறார். இதனால் மாணவர்களை மகிழ்ச்சிகொள்ளவும் அதேநேரத்தில் அதில் உள்ள உண்மைத் தன்மைகளை எளிதில் புரியும்படியும் செய்யவைத்து, பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார் ஆசிரியை ஜெயந்தி.


இதுதொடர்பாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரெ.பூமொழியைத் தொடர்புகொண்டு கேட்டபோது,“ இப்பகுதியில் முளைப்பாரி திருவிழா என்பது ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய ஒரு மிகப்பெரிய திருவிழா. திருவிழா என்பதையும் தாண்டி, இதில் உள்ள விவசாய சூட்சுமங்களையும் அறிவியல் உண்மையையும் இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களை முளைப்பாரி எடுத்துவரச் சொன்னோம். இதில், நான்காம் வகுப்பு மாணவர்கள் மட்டுமில்லாமல் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் ஆர்வத்துடன் முளைப்பாரி எடுத்து வந்தனர்.


எங்கள் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 61 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைப்பதற்காகப் பல்வேறு தானியங்களையும் விதைகளாகச் சேகரித்து வைக்கின்றனர். அப்படி சேகரித்து வைத்திருக்கும் விதைகளில், எவை நன்றாக முளைக்கும் திறன்கொண்டவை என்பதை உறுதிசெய்துகொள்வதற்கான ஒரு பரிசோதனை வடிவம்தான், இந்த முளைப்பாரித் திருவிழா. இதை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்குத்தான் இந்த முளைப்பாரியை எடுத்துவரச் சொன்னோம்.


இதற்காக நெல், சோளம், கம்பு, திணை, கேழ்வரகு, தட்டைப் பயறு போன்ற தானியங்களின் விதைகளைப் பானையில் போட்டு முளைப்பாரி அமைக்கச் சொன்னோம். கிட்டத்தட்ட எட்டு நாள்கள் பானையில் இட்டுப் பராமரித்து, நன்றாக முளைக்க வைத்து, சிறுசிறு நாற்றுகளாகக் கொண்டுவந்தனர். மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட முளைப்பாரிகளை வட்டமாக வைத்து, நடுவில் இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வரின் படத்தையும் வைத்து கும்மி கொட்டி ஆடிப் பாடினார்கள்...” என்கிறார்.


பாடம் நடத்திய ஆசிரியை இரா.ஜெயந்தி நம்மிடம், “ முளைப்பாரித் திருவிழா, தமிழகம் முழுவதும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இப்படி முளைப்பாரி போட்ட விதைகள் சரியாக முளைக்கவில்லை என்றால், அந்தக் குடும்பத்திற்கு தீங்கு விளையும் என்ற மூட நம்பிக்கை மக்களிடையே நிலவிவருகிறது. அந்த மூடநம்பிக்கையை உடைத்து, அறிவியல் உண்மையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் விதமாகத்தான் இந்த முளைப்பாரியை உருவாக்கி, மாணவர்களை எடுத்துவரச் சொன்னோம்.


நல்ல முளைப்புத் திறன்கொண்ட விதைகளும் போதுமான சூழலும் இருந்தால், எந்த விதையும் முளைத்துவிடும். அதுதான் அறிவியல் உண்மை. இதுபோன்ற மூடப் பழக்கங்களை மாணவர்கள் எப்போதும் நம்பக்கூடாது. இதுபோன்றவை பாடங்களில் வரும்போது, நேரடி விளக்கம் அளிக்கும் வகையில் இப்படி செயல்முறைத் திட்டமாகச் செய்யவைப்பது மாணவர்களுக்கு எளிதில் புரியும்” என்கிறார்.


“ இதுதவிர, இந்தப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, தினமும் காலை 11 மணிக்கு நவதானியக் கூழ் கொடுத்துவருகிறோம். இதற்கான மாவு வகைகள், கடந்த மார்ச் மாதம் பெற்றோர்கள் பள்ளிக்குக் கொடுத்த கல்விச் சீரில் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல், பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளுக்கு பள்ளியில் வழங்க பெற்றோர்கள் சாக்லேட் கொடுத்துவிடுவார்கள். அதற்குப் பதில், இதுபோன்ற நவதானிய மாவு வகைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறோம். அதன்படியே பெற்றோரும் கொடுத்துவிடுகிறார்கள். அவற்றை வைத்துதான் இந்தக் கூழ் தயார்செய்து, மாணவர்களுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.


அதேபோல், வறட்சியான இந்த காலகட்டத்தில், மழைநீர் சேகரிப்பை மாணவர்களின் வீடுதோறும் அமைக்க வலியுறுத்தி வருகிறோம். அதன் அவசியத்தை மாணவர்கள் புரியும்படி எடுத்துச்சொல்கிறோம். அத்துடன் பள்ளியில் மதிய உணவு நேரத்தில் சாப்பிட்ட தட்டுகள் மற்றும் கைகளைக் கழுவும் தண்ணீரைக்கூட எங்கள் மாணவர்கள் வீணாக்குவதில்லை.


இதற்காக, பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள ஒவ்வொரு மரக்கன்றுக்கு அருகிலும் தண்ணீர் நிறைந்த பாத்திரங்கள் வைத்திருக்கிறோம். அந்தத் தண்ணீரை எடுத்து பயன்படுத்தும்போது, அந்த நீர் செடிகளுக்குச் சென்று பயனளிக்கிறது. அதேபோல் சில குழந்தைகளின் பிறந்தநாளில், அவர்களின் பெற்றோர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுத்துவருகின்றனர் ” என்கிறார், பூமொழி.


புதுமையாய் சிந்திக்கும் சேந்தன்குடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியைகளையும் அதைத் திறம்பட பின்தொடரும் மாணவர்களையும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.


-பழ.அசோக்குமார்