. -->

Now Online

FLASH NEWS


Wednesday 30 October 2019

பலகாரங்கள் மூலம் ஊர்ப்பெருமை மற்றும் புவிசார்குறியீடு அந்தஸ்து பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்த உருவம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.





அன்னவாசல்,அக்.30 : தீபாவளி பலகாரங்களை வைத்து ஊர்ப்பெருமை மற்றும் புவிசார் குறியீடு அந்தஸ்து பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்து உருவம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அசத்தியுள்ளனர்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை ஜெ.சாந்தி கூறியதாவது: முந்தைய காலங்களில் தீபாவளியின் பொழுது பலகாரங்கள் செய்து  அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டு உண்பது தான் வழக்கம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலகாரங்களையும் ,திண்பண்டங்களையும் உண்பதற்கே நேரம் இல்லாமல் இருப்பதால் மற்றவர்களுக்கு பகிர முடியாமல் போய் விட்டது.மேலும்  பலரும் பலகாரங்களை கடைகளில் வாங்கி வந்து தீபாவளி கொண்டாடுகின்றனர்.ஆனால் கிராமங்களில் மட்டுமே அதிரசம்,முறுக்கு,சீடை ,இனிப்பு சுருள் என வகை வகையான பலகாரம் செய்கிறார்கள்..எனவே அவ்வாறு வீட்டில்  செய்யப்படும் பலகாரங்களை மாணவர்களை கொண்டு வரச் செய்தும்,நாங்களும் பலகாரங்கள் கொண்டு வந்தும் மாணவர்களுக்கு பகிர்ந்து உண்ணக் கொடுத்தோம்.அப்பொழுது மாணவர்களிடம் அல்வா என்றால்  திருநெல்வேலி,பஞ்சாமிர்தம் என்றால் பழனி,திருப்பதி என்றால் லட்டு என ஒவ்வொரு பலகாரத்தும்  ஓர் ஊர் ஞாபகம் வரும் என கூறி விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பால்கோவாவை வழங்கினோம்.பின்னர் பால்கோவாவில் புரதச்சத்து உள்ளது என்றும்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு மத்திய அரசின் புவிசார்குறியீடு அந்தஸ்து வழங்கியது பற்றியும் எடுத்துக் கூறினோம்.பின்னர் மாணவர்களுக்கு திருச்சி மணப்பாறை என்றாலே முருக்கும்,கரூர் மாவட்டம் என்றாலே வெள்ளியணை அதிரசம் தான் ஞாபகம் வரும் என கூறினோம்.இது போல பலகாரங்கள் பகிர்ந்து வழங்கி  உண்ணச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணும் பழக்கம் ஏற்படும்,பலகாரங்களை அறிமுகப்படுத்தும் பொழுது அந்த பலகாரங்கள் கிடைக்கும்  ஊரைப்பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்..மேலும் இது போல எந்த பலகாரம் ஒரு ஊரில் மட்டும் சிறப்பாக இருக்கிறதோ அந்த பலகாரத்திற்கு மத்திய அரசின் மூலம் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்படுத்துகிறது என்ற விபரத்தினையும் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர் என்றார்.

இந்நிகழ்வு குறித்து மூன்றாம் வகுப்பு மாணவி அ.பிரவீனா கூறும் போது பல வீட்டு பலகாரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிட்டது மனதிற்கு மகிழ்வாக இருந்தது.அதுவும் நண்பர்களோடு தீபாவளி பலகாரங்களை பகிர்ந்து சாப்பிட்டதை எப்பவும் மறக்கமாட்டோம் என்றார.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கு.முனியசாமி செய்திருந்தார்.