. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Sunday, 24 November 2019

`லீவு எடுத்ததால் தோப்புக்கரணம் போடச்சொன்ன ஆசிரியர்! - விபரீத முடிவெடுத்த தூத்துக்குடி பள்ளி மாணவி

SOURCE: விகடன்
`லீவு எடுத்ததால் தோப்புக்கரணம் போடச்சொன்ன ஆசிரியர்!' - விபரீத முடிவெடுத்த தூத்துக்குடி பள்ளி மாணவி*

தூத்துக்குடி, ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூரணச்செல்வி. இவர், மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (வயது 16) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். மரிய ஐஸ்வர்யா, அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும், வி.வி.டி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு பாட்டி இறந்துவிட்டதாகச் சொல்லி பள்ளிக்குச் செல்லவில்லையாம்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஞானப்பிரகாசம் என்பவர் விடுமுறை எடுத்ததற்காக கடுமையாகத் திட்டியதுடன், மைதானத்தில் ஓடச்சொல்லி, வகுப்பறையில் மற்ற மாணவிகள் முன்பு தோப்புக்கரணமும் போடச் சொன்னாராம். அந்த மாணவியை இரண்டாம் இடைப் பருவத்தேர்வையும் எழுத அவர் அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐஸ்வர்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவி ஐஸ்வர்யா தூக்குமாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்வம் குறித்து மாணவி ஐஸ்வர்யாவின் உறவினர்கள் கூறுகையில், ``பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுத்ததுனால கம்யூட்டர் பாடம் எடுக்குற வாத்தியாரு ரொம்ப திட்டி 51 தோப்புக்கரணம் போடச் சொல்லிட்டு, அதே வலியோட கிரவுண்டுல ஓடச் சொன்னாராம். வீட்டுக்கு வரும் போதே அழுதுகிட்டே மெதுவாத்தான் நடந்து வந்தா. `என்ன ஆச்சுமா'ன்னு கேட்ட பிறகுதான் விஷயத்தைச் சொன்னா. `இனிமேல் பள்ளிகூடத்துக்குப் போகலை. வீட்டுலயே இருந்துக்கிறேன்’ன்னு சொன்னா. `சரிம்மா, அழாதே'ன்னு சொல்லி மனசை தேத்தினோம்.

இன்னைக்கு ஸ்கூலுல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் நடந்துச்சு. அதுக்குக்கூட போகலை. வழக்கம்போல இன்னைக்கு ஐஸ்வர்யாவோட அம்மா, அப்பா வேலைக்குப் போயிட்டாங்க. வீட்டுல தனியா இருந்த பொண்ணு, தூக்கு மாட்டிக்கிட்டா. வெளியில விளையாடப் போயிருந்த அவளோட தம்பி, வீட்டுக்கு வந்து பாரத்ததும், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கியதைப் பார்த்து சத்தம் போட்டு அலறினான்.

அந்த சத்தத்தைக் கேட்டபிறகுதான் நாங்க, வீட்டுக்குள்ளாப் போயி பார்த்தோம். கொலையே நடுங்கிடுச்சு. வகுப்புல எல்லா மாணவர்கள் மத்தியிலயும் அந்த வாத்தியார் தோப்புக்கரணம் போடச் சொன்னது அவமானமா ஆயிடுச்சுன்னும், மத்த பிள்ளைகளும் தோப்புக்கரணம் போட்டதைச் சொல்லி கிண்டலடிச்சுப் பேசினாங்கன்னும் சொல்லிக்கிட்டே இருந்தா. லீவு போட்டதுக்கு ஒரு வாத்தியார் இப்படியா தண்டனை கொடுக்கணும்? இதனால ஒரு உயிரு போயிடுச்சேய்யா. அந்த ஆசிரியர் மேல நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

``இந்த வாத்தியார் எப்போதும் இதே மாதிரி மாணவர்களை திட்டிக்கிட்டேதான் இருப்பார். இவரால ரெண்டு மாணவர்கள் பள்ளிகூடத்துக்கே வரலை” என்றனர் சில மாணவர்கள். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஞான கெளரியிடம் பேசினோம், ``இன்று சனிக்கிழமை, பள்ளி விடுமுறை நாள். எனவே, திங்களன்று காலையில் பள்ளிக்குச் சென்று சம்மந்தப்பட்ட ஆசிரியர், சக மாணவியர் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN