. -->

Now Online

FLASH NEWS


Monday 18 November 2019

மாணவர் விவரத்தில் தவறு இருந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வு துறை எச்சரிக்கை








பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களில் தவறு இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தேர்வு துறை எச்சரித்துள்ளது.

பள்ளி கல்வி பாட திட்ட மாணவர்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு பொது தேர்வில், அரசு தேர்வு துறை வழங்கும் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, மாணவர்களின் மற்ற தேர்வுகளுக்கும் சான்றிதழ் வழங்கப் படுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு துறை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு துறை பணிகளுக்கும், பத்தாம் வகுப்பு சான்றிதழின் விபரங்களே கணக்கில் எடுக்கப்படும். எனவே, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு, தவறின்றி மாணவர் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை, அரசு தேர்வு துறை சேகரித்து வருகிறது. பள்ளிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களை, சரிபார்க்க அவகாசமும் அளிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியாக, அரசு தேர்வு துறை, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், மாணவர்களின், 'இனிஷியல்' எனப்படும், பெற்றோர் பெயரின் முதல் எழுத்து, ரத்தப்பிரிவு என, அனைத்து விவரங்களையும், தவறின்றி பதிவு செய்ய வேண்டும். பத்தாம்வகுப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அளிக்கும் விவரங்களிலும், தவறுகள் இருந்தால், தலைமை ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது