. -->

Now Online

FLASH NEWS


Tuesday 5 November 2019

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்: கல்விக் கடனுக்கான வட்டி ரத்தா? - வங்கி அதிகாரிகள் விளக்கம்

கடந்த 2009-14 ம் ஆண்டில் கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2009-14-ம் ஆண்டில் கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு தற்போது அக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ்அப்பில் தகவல்

பரவி வருகிறது.

இத்தகவல் உண்மையா என்பது குறித்து, வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

பொதுவாக, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு கீழே இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்காக அவர்கள் தாசில்தாரிடம் வருமானச் சான்றிதழ் பெற்று முதலாம் ஆண்டு படிப்பில் சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால், படிப்புக் காலம் முடியும் வரை அவருக்கு ஆண்டு தோறும் வங்கிகள் வழங்கும் கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு தள்ளுபடி செய்யும் வட்டியை வங்கிகளுக்கு அரசு மானியமாக வழங்கிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் பரவியுள்ள தகவலின்படி, 2009-14-ம் ஆண்டில் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், தங்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து அதற்கான வருமானச் சான்றிதழை சமர்ப்பித்த பிறகும் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால், அவர்கள் தற்போது வங்கியைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

அதை வங்கி தரப்பில் பரிசீலனை செய்து உண்மை என தெரியவந்தால், அவர்களுக்கு வட்டித் தள்ளுபடி செய்யப்படு்ம். மற்றபடி, ரூ.4.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்விக் கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்தனர்.

Source : தி இந்து தமிழ்