. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 November 2019

அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்



அரசு பணிகளில் பதவி உயர்வுக்கும், பணி மூப்புக்கும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட விதிகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பணி நியமனத்தில் மட்டுமல்லாது, ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கும் பணி மூப்பு மற்றும் பதவி உயர்விலும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து கடந்த 2003ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், சுழற்சி முறை இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணி மூப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் அரசு புதிதாக திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வு, தமிழக அரசின் இந்த நடைமுறையால் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறினர். விதிகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் இந்த சட்ட விதிகள், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்தனர். மேலும் அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் புதிய பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.