. -->

Now Online

FLASH NEWS


Friday 10 January 2020

குரூப் - 4 தேர்வு முறைகேடு விவகாரம்: ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் குழு விசாரணை

குரூப் - 4 டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ராமநாதபுர மாவட்ட மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் எழுதியவர்கள் மட்டுமே 40 பேர், முதல் 100 இடங்களை பிடித்ததாக வந்த தகவலே இதற்கு முக்கிய காரணம். இதையடுத்து தற்போது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் அந்த மையங்களில் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி குரூப் - 4க்கான தேர்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த 3214 பேர் தேர்வு எழுதினர். இதில் குறிப்பாக ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் முதல் தரவரிசை பட்டியலை பிடித்தனர்.

இது மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய செயலர் நந்தகுமார், இன்று ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் முத்துப்பேட்டை அருகே உள்ள தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அவருடன் 3 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப் - 4 தேர்வு நடைபெற்ற 6 மையங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேர்வு நடைபெற்ற இடம், தேர்வு மையத்தின் அறைகள், வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைகள் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வாணைய செயலர் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.

ஆய்வு தொடர்பாக தேர்வாணைய செயலரிடம் கேட்ட போது முழுமையாக ஆய்வு நடத்திய பின்னரே உண்மைகள் தெரிய வரும் என தெரிவித்துள்ளார். குரூப் - 4 தேர்வு முடிவுகளில் முதல் 40 பேர் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரதில் தேர்வெழுதியவர்களே பிடித்திருந்தனர்.

இதில் முறைகேடு நடந்ததே இதுபோன்ற அபரிவிதமான தேர்ச்சிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முறையான விசாரணை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள் தற்போது ராமநாதபுரத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற்ற மையங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.