. -->

Now Online

FLASH NEWS


Tuesday 14 January 2020

5,8-ம் வகுப்பு மாணவர்கள் சாதிச்சான்றிதழ் தரத் தேவையில்லை : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்தும் மாணவர்கள் சாதி சான்று வழங்க தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி, நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த செப்.13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. பின்னர் பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ், ஆதார் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் 5,8-ம் வகுப்பு மாணவர்கள் சாதிச்சான்றிதழ் தரத் தேவையில்லை என்று கோபிசெட்டிபாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

மேலும் சாதி சான்றிதழ் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்பப்பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் அதனை உபயோகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாகவும், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.