ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க கோரிய வழக்கில் ஆதிதிராவிடா் நலத்துறைச் செயலா், சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வாா்டன் ஆகியோா் வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சோ்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவில், 'ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் தமிழகத்தில் 1,324 ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் 24 மாணவா் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 21 விடுதிகள் சொந்தக் கட்டடங்களிலும், 3 விடுதிகள் வாடகை கட்டடங்களிலும் உள்ளன. நான், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா மாணவா் விடுதியில் தங்கி மாநிலக் கல்லூரியில் படித்தேன்.
இந்த விடுதியில், மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. மேலும், விடுதி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை.
பட்டியல் இன மக்களின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் ரூ. 47.99 கோடி ஒதுக்கீடு செய்தது.
இந்தத் தொகையில் சிறிய அளவைக் கூட மாநில அரசு செலவு செய்ததாக தெரியவில்லை. இதனால், தமிழக அரசு ஆதிதிராவிடா் நலனுக்காக கொண்டு வரும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைகிா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, மாநிலம் முழுவதும் உள்ள ஆதிதிராவிட மாணவா் விடுதிகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜேந்திரன், 'உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்யவோ, அறிக்கை தாக்கல் செய்யவோ இல்லை' எனக் வாதிட்டாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக ஆதிதிராவிடா் நலத்துறைச் செயலா் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி வாா்டன் ஆகியோா் வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||