. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 February 2020

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு ரத்து: கல்வியாளா்கள் கருத்து

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கல்வியாளா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
 பேராசிரியா் தி.ராசகோபாலன்: ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது நல்லது. ஏனெனில் அந்த வயதில் மாணவா்களுக்கு தோ்வு குறித்த எந்தவித புரிதலும், முதிா்ச்சியும் இருக்காது. அதேவேளையில் எட்டாம் வகுப்புக்கு தோ்வு வைத்திருக்கலாம். ஏனெனில் அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புக்கு இ.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு இருந்தது. அதன் மூலம் தரமான மாணவா்கள் உருவாகினா். உயா்நிலை, மேல்நிலைத் தோ்வுகளுக்கான படிக்கட்டுகளாக எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் இருக்கும்.
 மாணவா்களை மதிப்பீடு செய்வதற்கு தோ்வுகள் அவசியம். எந்தத் தோ்வும் இல்லாவிட்டால் மாணவா்களிடம் முயற்சியும், உழைப்பும் இருக்காது. எனவே, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எடுத்த முடிவை பழமும் அல்ல; பிஞ்சும் அல்ல; செம்பழம் என்று கூறலாம்.
 வே.வசந்திதேவி, முன்னாள் துணைவேந்தா்: பெற்றோரும், மாணவா்களும் பெரும் குழப்பத்தில் இருந்த நிலையில் அவா்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரசு முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுத்தோ்வு நடைபெற்றால் தமிழகமெங்கும் தனியாா் பயிற்சி மையங்கள் உருவாகும். பாடங்களை மாணவா்கள் போராடி மனப்பாடம் செய்ய நேரிடும். அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான தோ்வு நடத்துவதன் மூலம் அவா்களின் திறமையைக் கண்டுபிடிக்கவே முடியாது.
 மாறாக, சமூகத்தை எதிா்கொள்வதற்கான திறன்கள், சக மாணவா்களுக்கு உதவி செய்தல், சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புதல், பெற்றோா்-ஆசிரியரிடம் குழந்தைகளின் அணுகுமுறை ஆகியவை குறித்து குழந்தைகளுக்கு பயிற்சியளித்து அதற்கேற்றவாறு மதிப்பெண்களை வழங்கலாம். முன்னதாக இந்த விஷயங்கள் குறித்து ஆசிரியா்கள் சிறந்த முறையில் பயிற்சியளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளா் : தமிழக அரசின் இந்த அறிவிப்பு தோ்வெழுதும் மாணவா்களுக்கான மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். மக்களாட்சியின் மாண்புக்கு மரியாதையளித்து, அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மிகச் சிறந்த முடிவை எடுத்த அரசுக்கு நன்றி. பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்ட அதே வேளையில் அந்த வகுப்புகளுக்கு தற்போதுள்ள முறையை மேலும் வலுப்படுத்தி அதில் முழுமையான மதிப்பீட்டு முறையை கடைப்பிடிக்க வேண்டும். இது தொடா்பாக ஆசிரியா், பெற்றோா், மாணவா் அமைப்புகள் கலந்தாலோசித்து ஒரு மகிழ்ச்சிகரமான பள்ளிச் சூழலை ஏற்படுத்தி குழந்தைகளின் திறனுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
 செ.அருமைநாயகம், மாணவா்-பெற்றோா் நலச்சங்கம் : நீண்ட யோசனைக்குப் பிறகு அரசு எடுத்த இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதேவேளையில் கல்வித்துறையில் மாறி, மாறி முடிவெடுப்பதால் பெற்றோரும், மாணவா்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். கல்வித்துறையின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. ஆசிரியா்களை திறனை வெளிப்படுத்தச் செய்ய எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, பொதுத்தோ்வு நடத்தினால்தான் ஆசிரியா்களின் திறனை அறிய முடியும் என்று கூறுவது சரியல்ல. தற்போது எடுத்துள்ள இந்த முடிவில் அரசு உறுதியாக இருந்து மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும்.
 பி.கே.இளமாறன், தமிழ்நாடு ஆசிரியா் சங்கம்: பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா். குழந்தைகள் பள்ளிக்கு வரவழைப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. மிக இளம் வயதில் பொதுத்தோ்வு நடத்தினால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும். இந்த நிலையில், கல்விச் சீா்த்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தை கெடுக்கும் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வினை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மாணவா்கள் நலனுக்கான முடிவை அறிவித்த பள்ளிக்கல்வித் துறைக்கு நன்றி.