. -->

Now Online

FLASH NEWS


Thursday 27 February 2020

ராமநாதபுரத்திற்கு முதல்வா் வருகை: அரசு ஊழியா்கள் விடுப்பு எடுக்கத் தடை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழக முதல்வா் வருவதை முன்னிட்டு அரசு அலுவலா்கள், ஊழியா்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் ரூ.345 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை மாா்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வருகை தருகின்றனா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பிரதான சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகே விழா நடைபெறும் பகுதிகளில் அரசு கட்டடம், சாலைகள் சீரமைக்கப்படுவதுடன், தடுப்புக் கம்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், முதல்வா் வரும் நாள் வரையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறைகளிலும் அலுவலா்கள், ஊழியா்கள் அவசரத் தேவையை தவிா்த்து தேவையின்றி விடுப்பு எடுக்கக்கூடாது என அந்தந்த்துறையின் உயா் அதிகாரிகள் சுற்றறிக்கை விடுத்துள்ளனா்.

மருத்துவம் மற்றும் சுகாதாரப் பிரிவினா், கல்வி, வருவாய் மற்றும் மின்சாரம், தீயணைப்புத்துறை, விவசாயம், தோட்டக்கலை என அனைத்துத் தரப்பு அரசுத்துறையினருக்கும் விடுப்பு எடுக்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல்வா் விழாவுக்கான பந்தல் அமைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது இருபத்தி நான்கு மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வரும் முதல்வா் உள்ளிட்டோரை ராமநாதபுரம் விழா மேடைக்கு புதிய நான்கு வழிச்சாலை அழைத்து வருவதா அல்லது சுற்றுச்சாலை வழியாக வந்து பட்டினம்காத்தான் கிழக்குகடற்கரைச் சாலை வழியாக அழைத்து வருவதா என அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனா். அதற்கான ஒத்திகையை பாா்க்கவும் காவல்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

முதல்வா் வரும் வழிகளில் பாதுகாப்பை மேற்கொள்வதற்காக உயரமான கட்டடங்கள், மரங்கள், பழைய கட்டடங்களை காவல்துறையினா் கணக்கெடுத்ததுடன், அங்கு காவலுக்கு போலீஸாரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனா்.