. -->

Now Online

FLASH NEWS


Monday 23 March 2020

உக்ரமாகும் கொரோனா தொற்று எதிரொலி!!.. தமிழகத்தில் நாளை முதல் 144 தடை.. எதற்கெல்லாம் தடை ? எதற்கெல்லாம் அனுமதி ?

தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை  மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்ற ஒரு உத்தரவை தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதே போல நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். அத்யாவசிய தேவைகளை தவிர மற்ற நடவடிக்கைகள் ஈடுபடக் கூடாது என்றும் மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


*தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்

*தமிழகத்தின் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும்.

*கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்.கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

*பால், காய்கறி, மளிகை, இறைச்சி,மீன்  கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு

*மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்கும்.

*அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பார்சல் மூலம் மட்டுமே உணவுகள் வழங்க உணவகங்களுக்கு உத்தரவு 

*அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு தடையில்லை.

*பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்சிகள் உள்ளிட்டவை இயங்காது.

*மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவற்றுக்கு தடை

*அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவசர அலுவல்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.


*மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும்.

*தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

*அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

*தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது.

*அத்தியாவசிய கட்டிடப் பணிகள் தவிர பிற கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.

*வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதி

*தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்.

அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த *பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

*பிற இடங்களுக்கு சென்று வந்தவர்கள், கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

*குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது.

*வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

*தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு.

*அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, மருந்து பொருட்கள் விற்பனைக்கு எந்த தடையும் கிடையாது.