. -->

Now Online

FLASH NEWS


Monday 6 April 2020

இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு என்பது வதந்தி: மத்திய அரசு விளக்கம்

இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வதந்தி பரவிய நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள்.

இதனிடையே தற்போது வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தொலைக்காட்சி செய்திகளிலும், சமூக வலைதளங்கள் மூலமும் தெரிந்து கொள்கிறார்கள். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாகவும், ஊரடங்கு தொடர்பாகவும் பல்வேறு போலி செய்திகள், வதந்திகள், ஆடியோ பேச்சுகள், வீடியோக்கள் என இணையத்தை ஆட்கொண்டு வருகின்றன. இதனையும் பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகிறார்கள்.

உலக சுகாதார மையம் ஊரடங்கு குறித்து தெரிவித்த தகவல் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை உண்மை என்று நம்பி பலரும் இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவலைப் பரப்பினார்கள்.

இதற்கு மத்திய அரசு தங்களது ட்விட்டர் தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் தெரிவித்ததாக வெளியான புகைப்படத்தைப் பகிர்ந்து மத்திய அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

”ஊரடங்கு பற்றி உலக சுகாதார மையம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இணையத்தில் ஒரு புரளி சுற்றி வருகிறது. போலிச் செய்திகளை நம்பாதீர்கள். உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், பாதுகாப்புடன் இருங்கள்”.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Source: The Hindu Tamil