. -->

Now Online

FLASH NEWS


Friday 26 June 2020

கொரோனாவிலிருந்து நோயாளிகள் தப்ப வழி என்ன? சுகாதாரத் துறை ஆலோசனையை கொஞ்சம் கேளுங்க!


தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 'பல்வேறு நோய் பாதிப்புள்ளோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது. எத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பலாம் என, அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. 

நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு கையேட்டில் கூறியிருப்பதாவது:நீரிழிவு நோயாளிகள்

 நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை முறையாக தயாரித்து பருக வேண்டும்

 பருப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, மீன், முழு தானியங்கள், பச்சை மற்றும் நார்ச் சத்து மிகுந்த காய்கறிகள் உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, மிளகு போன்றவற்றை, உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

 வாரம் ஒரு முறை தவறாமல், உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெறும் வயிற்றில், 120 மி.கி., - சாப்பிட்ட பின், 180 மி.கி., இருக்கலாம்

 கால் பாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இன்சுலின் சிகிச்சையில் இருப்பவர்கள், தண்ணீர், திரவ உணவுகளை நிறைய உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி இருப்பின், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை அணுக வேண்டும்ரத்த அழுத்தம் உள்ளோர்

 ஏற்கனவே உட்கொள்ளும், உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை தாமாகவே நிறுத்தக் கூடாது; மாதம் ஒருமுறை, ரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதித்து கொள்ள வேண்டும்

 டாக்டர் ஆலோசனையின்றி, சுய வைத்தியம் செய்யக் கூடாது. வலி நிவாரணி மற்றும் ஸ்டிராய்டு போன்ற மாத்திரைகளை கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது

 தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்

 புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது; ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற உப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதய நோயாளிகள்

 எளிமையான மற்றும் குறுகிய நடைபயிற்சிகள், சுவாச பயிற்சிகள் அவசியம்; மேலும், தினமும், எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் இதய செயலிழப்பு நோய் உள்ளவர்கள், உப்பு மற்றும் நீர் கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும்

 மாரடைப்பு நோய்க்கான கொரோனரி ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்ட நோயாளிகள், தங்கள் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்வதுடன், கொழுப்பு சத்துள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்புற்று நோயாளிகள்

 கீமோதெரபி அல்லது புற்றுநோய்க்கான சில மருந்துகளை, நோயாளிகள் நேரில் வராமலேயே, உறவினர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் எளிதில் தொற்று ஏற்படும் சூழல் இருப்பதால், நவதானியங்கள், காய்கறிகள், பழங்களை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும்சிறுநீரக நோயாளிகள்

 சிறுநீரக பாதிப்புள்ளோர்; சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர், சாதாரண நபர்களை காட்டிலும், அதிக பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உண்டு எந்த காரணத்திற்காகவும், 'டயாலிசிஸ்' சிகிச்சையை தவிர்க்கக் கூடாது; தவிர்த்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

 உரிய மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்; நோயாளிகளின் சார்பில், அரசு மருத்துவமனைக்கு வரும்நபரிடம், ஒரு மாதத்திற்கான மருந்துகள் வழங்கப்படும்கர்ப்பிணி பெண்கள்

 பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்; தொண்டை கரகரப்பு, வலி, இருமல் மற்றும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் தீவிர தொற்றாகும்

 கர்ப்ப காலத்தில் நீரிழிவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய வியாதி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தாகும்.

இருமும் போதும், தும்மும்போதும், டிஷ்யூ பேப்பர், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யும் போது, 10 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்

 குழந்தையை தொடுவதற்கு முன்னரும், பாலுாட்டுவதற்கு முன்னரும், மார்பகம் மற்றும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்எய்ட்ஸ் நோயாளிகள்

 கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற பாதிப்பு உள்ளவரின் தொடர்பை தவிர்த்தல் வேண்டும்

 கூட்டு மருந்து உட்கொள்வதன் வாயிலாக, கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்து கொள்ளலாம்

 சீரான உணவு முறை, காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் அருந்த வேண்டும்

 மருத்துவ உதவிக்கு, 1800 419 1800/ 1097 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்காச நோயாளிகள்

 காசநோய் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மத்தியில், கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, மிகப் பெரிய சவாலாக உள்ளது. எனவே, அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்

 கண்ட இடங்களில் சளி, எச்சிலை துப்பக் கூடாது; சளியை ஒரு டப்பாவில் துப்பி, குழியை தோண்டி புதைத்திட வேண்டும் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து காற்றோட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.இவ்வாறு, சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.முதியவர்களே கவனமா இருங்க...!

 ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; வழக்கமான பரிசோதனைக்காக, டாக்டரை நேரில் சந்திக்காமல், தொலைபேசியில் ஆலோசனை பெற வேண்டும்

 மிதமான உடற்பயிற்சி, வீட்டிற்குள் நடைபயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்

 வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்போரிடம் இருந்தும், விலகி இருக்க வேண்டும்; உதவியாளர் இருப்பின், அவர்கள் கைகளை சுத்தம் செய்து, முக கவசம் அணிந்த பின் உதவ அனுமதிக்க வேண்டும்

 வயதானவர்களுக்கு தாகம் குறைவாக இருப்பின், போதுமான அளவு வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்

 சூடாக சமைத்த சத்துள்ள உணவையே சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள், வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

 சமைக்கும் போது, மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

 சில நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு, நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.'குட்டீஸ்' மீதும் அக்கறை தேவை!

  கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் வரலாம் என்பதால், குழந்தைகள் அடிக்கடி கைகழுவுவது மற்றும் முக கவனம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்; அலட்சியம் வேண்டாம்

 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்; மூச்சு விடுவதற்கான சிரமத்தை தவிர்க்க, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

 குழந்தைகளுக்கு தனியாக தட்டுகள், டம்ளர்கள் உபயோகிக்க வேண்டும். அவற்றை உபயோகித்த பின், கொதிக்கும் நீரில் நன்றாக கழுவ வேண்டும்

 தினமும் வீட்டை சுத்தப்படுத்துவதுடன், அதிக உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள், கதவு, தாழ்ப்பாள்கள், தண்ணீர் குழாய்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும்

 குழந்தைகளுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு வகைகள், பருப்பு, பால் வேகவைத்த முட்டை, மீன் வழங்க வேண்டும்

 சமைக்கப்படாத உணவுகளை வழங்கக் கூடாது; தோல் தனியாக உரிக்க முடிந்த பழங்கள் மட்டுமே, உட்கொள்ள தர வேண்டும்

 'தாலசீமியா' எனப்படும், மரபணு சார்பான நோய்க்கு, அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி சார்ந்த மருத்துவமனையில், ரத்தம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
Source: Dinamalar