'தொப்பை தமிழகத்தின் தேசிய அடையாளமாகிக் கொண்டிருக்கிறது' என்று ஒரு கூட்டத்தில் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் மருத்துவர் ஒருவர். தொப்பையைக் குறைக்க ஜிம்முக்குச் செல்வது, அதிகாலையில் எழுந்து ஓடுவது, ஏரோபிக்ஸ் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு டெக்னிக்கைப் பயன்படுத்துகிறார்கள். அனைத்துமே பலன் தரும் நல்ல விஷயங்கள்தான். அதனோடு உணவுப் பழக்கத்தையும் கொஞ்சம் கவனித்தால் கை மேல் பலன் கிடைக்கும். தொப்பையைக் குறைக்கும் ஆரோக்கிய உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்.
கொள்ளு
'இளைச்சவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்று பழமொழியே உண்டு. இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், நார்ச்சத்து நிறைந்த கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். கொள்ளுப் பருப்பை ஊறவைத்து, நீரை அருந்திவந்தால், உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும். கொள்ளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் குணமாகும். சளியை முறிக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். குளிர் காலங்களில் கொள்ளு சாப்பிடுவது உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
கொள்ளு ரசம்
தேவையான பொருள்கள்:
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 அல்லது 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 அல்லது 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1அல்லது 2
சின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது)
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
குக்கரில் கொள்ளைப் போட்டு, மூன்று கப் தண்ணீர் விட்டு, நான்கு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். வேகவைத்த கொள்ளு,வரமிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால், சிறிது சுடுநீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
கேழ்வரகு
வைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு, உடல் எடையைக் குறைப்பதில் மிகச் சிறந்த செயல்படு உணவு (Functional foods). இதில், குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. நிறைவுறா கொழுப்பு (Unsaturated Fat) அதிக அளவில் உள்ளது. இதனால், கெட்ட கொழுப்பு உடலைவிட்டு நீங்கும் நல்ல கொழுப்பு உடலில் சேர்வதால், இதயம் வலுவடையும், முழு உடலும் ஆரோக்கியம் பெறும். கேழ்வரகுக் கஞ்சியை மோருடன் சேர்த்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குச் சிறந்த உணவு. எளிதில் செரிக்கும்.
கேழ்வரகுக் கஞ்சி
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு - ஒரு கப், தண்ணீர் - 4 கப், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு, மூடி, அடுப்பில் வைத்துச் சூடுபடுத்தவும். கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நீர் கொதிநிலை அடைந்ததும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக்கொண்டே, மற்றொரு கையில் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு கட்டி தட்டாமல் இருக்கும். சூடு மிதமாக இருக்கட்டும். கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி, வாசம் வந்ததும், உப்பு சேர்த்து இறக்கவும். இதோடு கத்திரிக்காய் பொரியல், மாங்காய், எலுமிச்சை ஊறுகாய், நீர்மோர் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட, நன்றாக இருக்கும்.
வறுபயறுகள்
வறுபயறுகள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள். மாலை நேரங்களில் உளுந்து, கம்பு, தினை, அலிசி விதை, ஆளி விதை உள்ளிட்ட தானியங்களை வறுத்துச் சாப்பிட்டுவந்தால், வயிறும் நிறையும், உடல் எடையும் குறையும். வறுபயறுகள் ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாகக் கலப்பதால், அதன் கிளைசெமிக் எண் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடலாம். திடீர் சர்க்கரை உயர்வு (Hyperglycemia) பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். பெரும்பாலான பயறுகள் கொழுப்புச்சத்து குறைவானவை. சில பயறுகள் முற்றிலும் கொழுப்பற்றவை. அதிகக் கொழுப்புச்சத்து உள்ளவர்கள் வறுபயறுகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்குகிறது. நல்ல கொழுப்பு அதிகரித்து. உடல் ஃபிட்டாகிறது.
கல்யாண முருங்கைத்தழை
கல்யாண முருங்கைத் தழை. கசப்புச்சுவையும் உஷ்ணமும் நிறைந்தது. நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சாராக்கி, ஃப்ரெஷ் ஜூஸாகக் குடிக்கலாம். தோசை மாவில் கலந்து, தோசையாக வார்த்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்தத் தீர்வாக அமையும்.
கொடம்புளி
கொடம்புளியை அன்றாடச் சமையலில் ரசம் வைக்கப் பயன்படுத்தலாம். ஏலக்காய், பனங்கற்கண்டு, கொடம்புளி சேர்ந்த பானகத்தைப் பருகலாம். இதனால், வயிறு மற்றும் இடுப்பில் சேர்ந்து உள்ள அதீத கொழுப்புப் படலம் கரையும். கொடம்புளி மாத்திரைகள் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இதனை, தினமும் சாப்பிடுவதன் மூலம் அடிவயிறு, கைகளின் பின்பக்கம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற ஊளைச் சதை (Adipose tissue) கரையும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கைகால் மூட்டு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) எனப்படும் தண்டுவட எலும்புகள் வலுவிழத்தல் நோய் ஆகியவை தவிர்க்கபபடுகின்றன.
கொடம்புளி சூப்
50 கிராம் கொடம்புளியை 300 மில்லி வெந்நீரில், இரவிலேயே ஊறவைக்க வேண்டும். 50 கிராம் கொள்ளை, வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த 400 மி.லி-யைக் கொதிக்க வைத்து, 100 மி.லியாக வற்ற வைக்க வேண்டும். வற்றியதும் வடிகட்டிய சூப்பில் சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். இதனுடன் 5 மி.லி தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இதனால் பசி தூண்டப்படும். செரிமானம் அதிகரிக்கும்.
நன்றி- ஆனந்த விகடன்.