பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, ‘பணப் பரிமாற்றம் அனைத்தும் வங்கி மூலமாகவே நடைபெற வேண்டும்’ என்று மக்களைக் கட்டாயப்படுத்திவருகிறது மத்திய அரசு. அதேவேளையில், ‘ஐந்து முறைக்கு மேல் பணப் பரிமாற்றம் மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும். சேமிப்புக் கணக்குகளில், குறைந்தபட்ச இருப்பாக ரூபாய் ஐந்து ஆயிரம் வரை வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும்’ என்று புதிய விதிமுறைகளை உருவாக்கி மக்களை மிரட்டுகின்றன வங்கிகள்!
ஓய்வூதியதாரர்கள், மாணவர்கள், விவசாயிகள் என கிட்டத்தட்ட 31 கோடி வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை அளித்துவருகிறது ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’! தேசியமயமாக்கப்பட்ட இந்த வங்கி தற்போது அறிவித்திருக்கும் ‘குறைந்தபட்ச இருப்பு’ அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசே கோரிக்கை வைத்திருக்கிறது.
இந்த நிலையில், ‘வங்கிகளின் இந்தப் புதிய கட்டணக் கொள்கைகள் அடித்தட்டு மக்களிடம் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்?’என்பது குறித்து பங்குச் சந்தை ஆலோசகரும் பொருளாதார நிபுணருமான வி.நாகப்பனிடம் கேட்டோம். “கையில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால்தான் பணத்தை வங்கியில் போட்டு வைத்திருக்கிறோம். எனவே, மாதத்துக்கு 4, 5 தடவை பணம் எடுப்பதென்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால், வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக இனிமேல், சம்பளம் போட்டதுமே எடுத்து வீட்டில் வைக்க வேண்டிய நிலை உருவாகிவிடும். எனவே, ஒரு மாதத்தில் 40 - 50 முறைக்கு மேலாக வங்கிகளில் பணம் போட்டு எடுக்கும் நபர்களுக்குக் கட்டணம் விதிக்கலாம். சாதாரண மக்களுக்குக் கட்டணம் என்பது நியாயமில்லாதது.
வங்கிகளுக்கு ஏன் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.? என்னுடைய பணத்துக்கு மிகக் குறைந்த வட்டியைக் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை வைத்து வங்கிகள் அதிக லாபம் சம்பாதிக்கப் பார்க்கத்தானே...? அந்தப் பணத்தையும்கூட விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களுக்குக் கொடுத்துவிட்டு, பணம் திரும்பவரவில்லை என்று சொல்வதெல்லாம் ஏமாற்றுவேலை. எனவே, இந்தக் கட்டணத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு என்ன சொல்கிறது?
எஸ்.பி.ஐ வங்கியில், தற்போது மினிமம் பேலன்ஸ் என்பது ரூ.500 ஆக உள்ளது. இதை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.5000-ஆக உயர்த்தியிருக்கிறது. குறைந்தபட்ச நிதியைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்குக் கிராமப்பகுதியாக இருந்தால் ரூ.20-ம், பெருநகரப்பகுதியாக இருந்தால் ரூ.100-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. பெருநகரம், நகரம், சிறுநகரம், கிராமம் என்று நான்கு வகைகளாக தன்னுடைய கிளைகளைப் பிரித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. இதில், குறைந்தபட்ச பண இருப்பாக பெருநகரங்களில் ரூ.5,000, நகர்ப்பகுதிகளில் ரூ.3,000, சிறுநகரங்களில் ரூ.2,000, கிராமப்பகுதிகளில் ரூ.1000 இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஐந்து வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஏப்ரல் 1-ம் தேதி இணைக்கப்படுகின்றன. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கும் சிட்டி வங்கி உள்ளிட்ட வங்கிகள், ‘பல லட்சங்களை டெபாசிட் செய்த, பல லட்சங்களை அக்கவுண்டில் மெயிண்டெயின் செய்யும் அளவுக்கு வசதியுள்ள ப்ரீமியம் கஸ்டமர்கள் மட்டும் வங்கிக்கு வந்தால் போதும்’ என்ற கொள்கையைப் பின்பற்றுகிறன. பல லட்சங்கள் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வங்கிக்கு லாபங்களும் அதிகமாகக் கிடைக்கும். எனவே, தனது வாடிக்கையாளருக்கு, வாலட் பார்க்கிங் தொடங்கிப் பல்வேறு சேவைகளை இந்த வங்கிகள் அளிக்கின்றன. அதுவே, குறைவாக டெபாசிட் செய்பவர்களுக்கு வங்கிக்கு வராமலேயே பணப் பரிமாற்றம் செய்துகொள்ள டெபிட் கார்ட் உள்ளிட்ட சேவையை அளிக்கின்றன. ஏனெனில், அமெரிக்காவில் ஊழியர்கள் சம்பளம் அதிகம். பலரும் வங்கிக் கிளைக்கு வந்தால், அதைக் கையாள அதிகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். செலவும் அதிகமாகும் என்பதால் இதுபோன்ற நடைமுறையை இந்த வங்கிகள் பின்பற்றுகின்றன. அதேபோன்ற நடைமுறையை நம் ஊரில் உள்ள தனியார் வங்கிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் பின்பற்ற நினைக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
சிட்டி வங்கி, ஹெச்.எஸ்.பி.சி போன்ற வங்கிகள் மேல்தட்டு மக்களுக்குச் சேவை அளிக்கின்றன. எஸ்.பி.ஐ போன்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்குச் சேவை அளிப்பதற்காக உள்ளன. குக்கிராமங்களிலும், சிறுநகரங்களிலும்தான் இதன் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
7 முதல் 7.5 சதவிகித வட்டி கொடுப்பதாகச் சொல்லி நம்மிடமிருந்து கடன் (ஃபிக்சட் டெபாஸிட்) வாங்குகின்றன வங்கிகள். பின்னர், அந்தப் பணத்தை வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் முனைவோருக்குக் கடன் என்று இன்னும் அதிக வட்டிக்கு வழங்குகின்றன. தொழில் அதிபர்களுக்கு குறைந்த வட்டியில் பணத்தைக் கொடுப்பதும், அந்தப் பணத்தையும் திரும்பப் பெற முடியாத சூழல் வரும்போது, ‘ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, கிளைகளை நடத்த முடியவில்லை, லாபம் இல்லை’ என்றெல்லாம் காரணங்கள் கூறுவதும் தவறு.
‘செக் புக் வேண்டும் என்றால் கட்டணம், பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம்’ என்று அடித்தட்டு மக்கள் மீது சுமையை ஏற்றும்போது, ‘நம்முடைய பணத்தை எடுக்கக் கட்டணமா?’ என்று பலரும் டெபாசிட் செய்யவே யோசிப்பார்கள். இதனால், முன்புபோலவே ரொக்கப் பணப் பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்படும். இந்திய அரசோ, மறைமுக வர்த்தகத்தைத் தடை செய்ய நினைக்கிறது. ஆனால், வங்கிகளோ மறைமுக வர்த்தகத்தை நோக்கி மக்களைத் தள்ளுகின்றன. எனவே இதுபோன்ற திட்டங்களை இன்னும் எளிமையாக்கி, 10 - 15 வருடங்கள் கழித்து அறிமுகம் செய்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்” என்றார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||