t> கல்விச்சுடர் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால18 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை​​ - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 November 2017

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால18 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை​​

தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழையையொட்டி இலங்கை அருகே வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் பல இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முதலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தபடி கரையை கடந்தது. தொடர்ந்து, கடந்த 2ம் தேதி இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை 4வது நாளாக நேற்றும் நீடித்தது. காற்றழுத்தம் பகல் நேரத்தில் கடல் பகுதியை நோக்கியும், இரவுப் பொழுதில் நிலப்பகுதியை நோக்கியும் நகர்ந்தபடி இருந்தன.

இதனால் சென்னையில் பகலில் மழை பெய்யவில்லை. இரவில் மட்டும் விடிய, விடிய, கனமழை பெய்கிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் மத்திய மேற்கு வங்கக்கடலில் தமிழகம் முதல் தெற்கு ஆந்திரா கடல் பகுதிவரை நிலவியிருந்தது.  இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினமும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செ.மீ மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை வரை மழை பெய்யவில்லை. லேசான வெயிலுடன் இதமான வானிலை நிலவியது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று மன்னார் வளைகுடா முதல் வடதமிழகம் வரை பரவியது. இதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. 

 அதன்படி சென்னையில் மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, கிண்டி, தி.நகர், எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை 5 மணி அளவில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. ஊத்துக்கோட்டை, மீனம்பாக்கம், பொன்னேரி, மீஞ்சூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகை, கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.
இந்த நிலையில், வடதமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலையால் இன்று இரவும் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். அதேபோல், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 

தென்மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும். மொத்தம் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதற்கிடையில், அந்தமான் அருகே கடல் மட்டத்தில் இருந்து 4.5 கி.மீ தூரத்தில் புதிதாக மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இன்றோ அல்லது நாளையோ உருவாகும். இதுவும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்தால் மேலும் ஒரு வாரம் மழை நீடிக்கும். அப்படி இல்லாத நிலையில், புதன் இரவு முதல் படிப்படியாக மழை குறையவும் வாய்ப்பு உண்டு என்றும் தெரிகிறது.

நவ.9ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும். குறிப்பாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும். காற்றழுத்த தாழ்வுநிலை பொதுவாக பகல் நேரத்தில் கடல்பகுதியை நோக்கி நகர்வதால் இந்த மழை இரவில் தான் பெய்யும். நேற்று அதிகபட்சம் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செ.மீ, மணிமுத்தாறு, நாகையில் தலா 12 செ.மீ, நாங்குநேரி, கடலூரில் தலா 9 செ.மீ மழை பதிவானது.


JOIN KALVICHUDAR CHANNEL