'Source : Dinamalar
திருப்பூர்; மைக்ரோ அப்சர்வர்கள், ஒட்டுமொத்த ஓட்டுச்சாவடி பணிகளை கண்காணித்து, அறிக்கை அளிக்க வேண்டும், என, தேர்தல் பார்வையாளர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு கட்டமாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம், 156 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என்றும், 94 சாவடிகள், மிகவும் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 250 பதட்டமான ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இவற்றில், 30 ஓட்டுச்சாவடிகள், வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும்; 100 ஓட்டுச்சாவடிகளில், அனைத்து நடவடிக்கையும், வீடியோ பதிவு செய்யப்படும். மீதியுள்ள, 120 ஓட்டுச்சாவடிகளில், மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வங்கி மற்றும் எல்.ஐ.சி., பணியாளர்கள், 120 பேர், மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார் வரவேற்றனர்.தேர்தல் பார்வையாளர் கஜலட்சுமி பேசியதாவது:வரும், 27 மற்றும், 30ம் தேதிகளில், இரண்டு கட்டமாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பதட்டமான சாவடிகளில், ஒரு மணி நேரம் முன்னதாக சென்று, சாவடி நிலைமையை தெரிந்துகொள்ள வேண்டும். மைக்ரோ அப்சர்வர்கள், எவ்வித தேர்தல் பணிகளையும் செய்ய வேண்டியதில்லை.ஒட்டுமொத்த ஓட்டுச்சாவடி பணிகளையும் கண்காணித்து, தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஓட்டுச்சாவடியை கண்காணித்து, தேர்தல் கமிஷன் வழங்கும், அறிக்கை படிவத்தை, பூர்த்தி செய்து, அன்றே கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி, ஓட்டுச்சாவடிகளில் முறையாக தேர்தல் நடப்பதை, மைக்ரோ அப்சர்வர்கள் கண்காணிக்க வேண்டும். அதேநேரம், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் பணியில் தலையிடக்கூடாது.ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும், மைக்ரோ அப்சர்வர் அறிக்கையின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, படிவத்தை முறையாக பூர்த்தி செய்து கொடுத்து, தேர்தல் சிறப்பாக நடக்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, தேர்தல் பார்வையாளர் பேசினார்.
.