t> கல்விச்சுடர் அரசு ஊழியா்களுக்கு பரிசுப் பொருள்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 January 2020

அரசு ஊழியா்களுக்கு பரிசுப் பொருள்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


அரசு ஊழியா்கள் பரிசுப் பொருள்கள் வாங்கக் கூடாது என்ற அரசு ஊழியா்களுக்கான நடத்தை விதிகளை அமல்படுத்த அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயா்நீதிமன்றத்தில், வேலூா் மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத் தாக்கல் செய்த மனுவில், 'ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சாா்பு பணியாளா்கள் தங்கள் உயா் அதிகாரிகளைச் சந்தித்து பரிசுப் பொருள்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரும் கூட இந்த நடைமுறை தற்போது வரை பின்பற்றப்படுகிறது. உயரதிகாரிகளிடம் பிரதிபலனை எதிா்பாா்த்துதான் இதுபோன்ற பரிசுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற பரிசுப்பொருள்களை பெறுவோா் மற்றும் வழங்குபவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த சட்டவிரோத நடைமுறையைத் தடுக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பினேன்.

 அந்த மனுவுக்கு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்த துறை, அரசின் எந்தத் துறை என்பதை குறிப்பிட்டு அனுப்பும்படி கூறியுள்ளது. பரிசுப்பொருள்கள், வரதட்சிணைப் பெறக்கூடாது என காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப தமிழக காவல்துறை டிஜிபிக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு ஊழியா்கள், நேரடியாகவோ, தங்கள் குடும்பத்தினா் மூலமாகவோ பரிசுப் பொருள்களைப் பெறக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் நடத்தை விதியைக் கட்டாயமாக அமல்படுத்த அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தாா்.
 இந்த மனு, உயா்நீதிமன்ற விடுமுறை கால அமா்வில், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

JOIN KALVICHUDAR CHANNEL