வாட்ஸ்ஆப்பில் உள்ள ஸ்டேட்டஸ் வசதி மூலம் இனி 15 நொடிகளுக்கும் குறைவாக உள்ள வீடியோக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
பிரபல வாட்ஸ்ஆப் செயலியில் தகவல்கள் அனுப்புவதற்கிடையே, பலரும் ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்களை அனுப்புவது வழக்கம். வாட்ஸ்ஆப் நிறுவனம் இவ்வசதியை கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டுவந்தது.
இந்த ஸ்டேட்டஸில் தங்கள் மனம்போல் வீடியோக்களை அனுப்பி, தங்கள் உறவினர்கள் & நண்பர்களைக் குஷிப்படுத்துவார்கள் வாட்ஸ்ஆப் பயனாளிகள்.
வீடியோக்கள் மட்டுமன்றி, புகைப்படங்கள் மற்றும் GIF images உள்ளிட்டவற்றையும் அனுப்பலாம். அதிகபட்சம் ஒரு நாள் முழுவதும் அந்த ஸ்டேட்டஸில் ஒரு வீடியோவை வைத்திருக்க முடியும்.
இந்த வீடியோக்களை அனுப்புவதில்தான் தற்போது ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஸ்டேட்டஸில் அனுப்பப்படும் ஒவ்வொரு வீடியோவும் இனி 15 நொடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 16-நொடி அல்லது அதற்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்ப முடியாது என்றும் தெரிகிறது.
கொரோனாவைத் தவிர்க்க தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளிகள் ஸ்டேட்டஸ் மூலம் ஏராளமான வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், தங்கள் சர்வர் டிராஃபிக் 'தொங்கி'விடக் கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வீடியோ நேரக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் இந்த ஸ்டேட்டஸ் வசதி தொடங்கப்பட்ட போது, அதில் 90 நொடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை வீடியோக்களை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அது 30 நொடிகளாகக் குறைக்கப்பட்டு, தற்போது 15 நொடிகளாக மேலும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.