ஊரடங்கால் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வுகளை மே இறுதியில் நடத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் கல்வி ஆணையர் தலைமையில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால், பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வுகளில் சிலவும், பத்தாம் வகுப்பு தேர்வு முற்றிலுமாக ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மே மாதம் 3 ம் தேதிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்புமா அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் தேர்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு 20ம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட சில துறைகள், தொழில்கள் இயங்கலாம் என்று அரசு அறிவித்ததை அடுத்து, பள்ளிக் கல்வித்துறையை ேசர்ந்த அதிகாரிகள் இன்று பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களின் வருகை பதிவேடு குறைந்துள்ளதால் அதை சரி செய்யும் விதமாக ஒருவேளை மே மாதம் பள்ளிகள் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும். அதனால் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் இன்று பணிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதேபோல, பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளும் இன்று பணிக்கு திரும்ப உள்ளனர்.
இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் இன்று அவசரக்கூட்டம் நடக்க இருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வி துறை இயக்குநர், தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்று ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர்.
அதற்கு பிறகு தேர்வு அட்டவணையும் வெளியாகும் என்று தெரிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வை மே மாதம் நடத்தும்போதே பிளஸ் 1 தேர்வையும் சேர்த்து நடத்த உள்ளனர்.
மேலும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் மே மாதம் தொடங்கி நடத்தப்படும். ஜூன் மாதம் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.
மே மாதம் பள்ளி திறப்பு?
ஊரடங்கு காரணமாக பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 9ம் வகுப்பு ேதர்ச்சி பெற்ற மாணவர்களின் வருகைப் பதிவேடு மிகவும் குறைவாக உள்ளது.
எனவே, அதை ஈடுகட்டும் வகையில் சில வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதாவது 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மே மாதம் கடைசி வாரத்தில் திறக்கப்படலாம் என்ற ஆலோசனையும் கல்வித்துறை வட்டாரத்தில் உள்ளது.