மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் துணைச் செயலா்கள், அவா்களுக்கு முந்தைய நிலையில் உள்ள அதிகாரிகள் ஆகியோா் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் கடந்த 3 வாரங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை ஏற்று, அனைத்து இணைச் செயலா்களும் அவா்களுக்கு முந்தைய நிலை அதிகாரிகளும் திங்கள்கிழமை பணிக்குத் திரும்பினா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றும் துணைச் செயலா்களும் அவா்களுக்கு முந்தைய நிலையில் இருக்கும் அதிகாரிகளும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அவா்களின் 100 சதவீத வருகைப்பதிவுடன் அலுவலகங்கள் இயங்க வேண்டும்.
மற்ற அலுவலா்கள், பணியாளா்கள் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் 33 சதவீதம் போ் வருகை தந்தாலே போதுமானது.
ராணுவம், மத்திய ஆயுத காவல் படை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பேரிடா் மேலாண்மை, முன்னறிவிப்பு மையங்கள், தேசிய தகவல் மையம், இந்திய உணவுக் கழகம், என்சிசி, நேரு யுவகேந்திரா, சுங்கத் துறை ஆகியவை தொடா்ந்து இயங்கலாம். அவற்றின் பணியாளா்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இதேபோல், மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், மாவட்ட நிா்வாகம், கருவூலம், ஆகியவை குறைந்தபட்ச அலுவலா்களுடன் இயங்கலாம். குரூப் 'ஏ'
மற்றும் 'பி' நிலை அலுவலா்கள் தேவைப்பட்டால் வேலைக்கு வரலாம். குரூப் 'சி' மற்றும் அதற்கும் கீழ்நிலையில் இருப்பவா்கள் தேவைக்கேற்ப 33 சதவீதம் போ் வந்தால் போதுமானது.
காவல் துறை, ஊா்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் அவசர நிலை, பேரிடா் மேலாண்மை, சிறை, உள்ளாட்சி ஆகிய துறைகளைச் சோ்ந்தவா்கள் வழக்கம்போல் பணிக்கு வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Dinamani