மொபைல் அழைப்புகள் மூலமாக யாரேனும் உங்களது வங்கிக்கணக்கு விபரங்கள், இ.எம்.ஐ ஒத்திவைப்புக்காக ஓடிபி கேட்டால், பகிர வேண்டாம் என்று வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வசதிக்காக சில விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நோயால் நாடு முழுவதும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் மோசடி செய்பவர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதன்படி, மர்ம நபர்கள் சிலர் வாடிக்கையாளர்களுக்கு போன் மூலமாக தொடர்பு கொண்டு, உங்களது இ.எம்.ஐ- யை ஒத்திவைக்க வேண்டுமெனில் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பகிரும்படி கேட்கின்றனர். அவ்வாறு ஒடிபியை தெரிவிக்கும்பட்சத்தில் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.
எனவே, யாரேனும் இதுபோன்று போன் அழைப்பு மூலமாக ஒடிபி கேட்கும்பட்சத்தில் கவனமாக இருக்குமாறு வங்கிகளாலும் அறிவுறுத்தப்படுகிறது.
எச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்பிஐ மற்றும் பிற வணிக வங்கிகள் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு போன் அழைப்பு/எஸ்.எம்.எஸ் மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
மொபைல் அழைப்புகள் மூலமாக யாராவது உங்களது வங்கிக்கணக்கு விபரங்கள், இ.எம்.ஐ குறித்து ஓடிபி கேட்டால் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.