ஒன்றுபட்டால் உண்டுனக்கு வாழ்வு என்றும் என்றார்
தனித்திருந்தால் தவிர்க்கலாம் சாவையும் என்றார்
அவருக்கும் ஆம் என்றார் இவருக்கும் ஆம் என்றார்
ஆட்டிவைத்தால் ஆடி நிற்கும் பாவையாக நின்றார்.
ரசித்து ருசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கையாகும் என்றார்
அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு என்றார்
அதையும் தான் சரி என்றார் இதையும் சரி தான் என்றார்
இல்லையென்று சொன்னாலும் ஆம் என்றே சொன்னார்.
உலகையெல்லாம் படைத்தது கடவுள் என்று சொன்னார்
கடவுளைப் படைத்ததே மனிதன் தான் சொன்னார்
அதுதானே உண்மையென்றார் இதுதானே உண்மையென்றார்
இயற்கை தான் கடவுளென்றால்
உண்மைதான் என்றார்.
ஏற்றிருக்கும் பாத்திரத்தை இயல்பாகவே காட்டி
தேவையான இடங்களிலே மிகை தனையே கூட்டி
இரசனைக்காய் ஆங்காங்கே நகைச்சுவையை ஓட்டி
இயல்பதனை மறைப்பதற்காய் முகமூடியை மாட்டி
நடிக்கின்ற அனைவருமே கோமாளிகள் இங்கே.
கோமாளியாய் மாறிவிட்டார் மனிதர்கள் இங்கே.
*கிராத்தூரான்