கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 95,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 6,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி ராகவலா லாரன்ஸ் தெரிவித்ததாவது: சந்திரமுகி 2 படத்துக்காக சன் டிவி எனக்கு வழங்கிய முன்தொகையிலிருந்து ரூ. 3 கோடி கரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறேன். அதில் ரூ. 50 லட்சத்தை பிரதமர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 50 லட்சத்தை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 50 லட்சத்தை பெப்சி திரைப்படத் தொழிலாளர் அமைப்புக்கும் வழங்குகிறேன். மேலும் ரூ. 50 லட்சத்தை நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கும் ரூ. 25 லட்சத்தை எனது மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 75 லட்சத்தை அன்றாடப் பணியாளர்கள் மற்றும் எனது பகுதியான ராயபுரம் தேசியநகரில் உள்ள ஏழைகளுக்கும் வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
கரோனா நிவாரண நிதிக்குப் பிரபல தமிழ் நடிகர்கள் பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளார்கள். அவர்களில் ராகவா லாரன்ஸ் தான் அதிகபட்ச தொகையை அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.