தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோயின் நிலைமையை அறிந்துதான், ஊரடங்கு நீடிக்கப்படுமா, முடித்துக்கொள்ளப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இது ஒரு தொற்றுநோய். நாளுக்கு நாள் தொற்று நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது கட்டத்தில்தான் தற்போது வரை இருக்கிறது. 2வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்குதான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறினார். இந்நிலையில், வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அவை பின்வருமாறு; * தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும்.
* பராமரிப்பு பணி செய்வர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
*தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், விரிப்புகளை தனியாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
* முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் தனிமைப்படுத்தப்பட்டவருடன் தொடர்பில் இருக்க கூடாது.
*தனிமைப்படுத்தப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
* வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
*தனிமைப்படுத்தப்பட்டவருக்கு சளி, காய்ச்சல் இருந்தால் 104 அல்லது 1800 120 555550-ஐ தொடர்பு கொள்ளலாம்.