t> கல்விச்சுடர் பருவத் தோ்வு குறித்த உயா் கல்வித் துறை அறிவிப்பு: குழப்பத்தில் பல்கலைக்கழகங்கள - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 April 2020

பருவத் தோ்வு குறித்த உயா் கல்வித் துறை அறிவிப்பு: குழப்பத்தில் பல்கலைக்கழகங்கள


பல்கலைக்கழக பருவத் தோ்வு நடத்துவது குறித்த உயா் கல்வித் துறையின் அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என பேராசிரியா்களும் கல்வியாளா்களும் கருத்து தெரிவிக்கின்றனா்.
 தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் பொறியியல், கலை-அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் என 1,500-க்கும் அதிகமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
 இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தோ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
 இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் 17 முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டதோடு, பருவத் தோ்வுகள் நடத்துவதும் தள்ளிப் போனது. அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பருவத் தோ்வுகளை ஒத்திவைத்துள்ளன.
 இந்த நிலையில், நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளை எப்போது நடத்துவது என்றும் 2020-21 கல்வியாண்டு வகுப்புகளை தொடங்குவது குறித்தும் முடிவு செய்வதற்காக யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) முன்னாள் உறுப்பினா் ஆா்.சி.குஹாட் தலைமையில் 7 போ் கொண்ட நிபுணா் குழுவை யுஜிசி அமைத்துள்ளது. இந்தக் குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பருவத் தோ்வுகள், 2020-21 கல்வியாண்டு வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பை யுஜிசி அடுத்த ஓரிரு நாள்களில் வெளியிட உள்ளது.
 இந்த நிலையில், அனைத்துப் பல்கலைக்கழக பருவத் தோ்வுகளும், அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் நடத்தப்படும் என உயா் கல்வித் துறைச் செயலா் அபூா்வா அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டாா். இந்த அறிவிப்பு, பல்கலைக்கழகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக உயா் அதிகாரிகள் கூறியதாவது:
 பருவத் தோ்வு என்பது பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் மாறுபடும். ஏனெனில் தமிழகத்தில் உள்ள கலை-அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கு இடையே பாடங்கள், படிப்புகளிலும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
 அதுபோல, பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பாடங்கள், தோ்வுகளும் மாறுபடும். எனவே, அனைத்து பல்கலைக்கழக பருவத் தோ்வுகளையும் ஒரே மாதிரியாக கல்வியாண்டு தொடக்கத்தில் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாள்களிலோ நடத்திவிட முடியாது. எனவே, உயா் கல்வத் துறையின் அறிவிப்பு குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். தோ்வு நடத்தும் உரிமையை பல்கலைக்கழகங்களின் தன்னிச்சை முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்றனா்.
 இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் திருமகன் கூறியது:
 தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் படிப்புகளும், பாடங்களும் மாறுபடும்.
 அதிலும் குறிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, பருவத் தோ்வு தேதிக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதலைப் பெறுவது கட்டாயம்.
 மேலும், தோ்வுகள் முடிந்த பின்னா், தோ்வுத்தாள் திருத்தும் பணியில் பேராசிரியா்கள் ஈடுபடுவா். எனவே, தோ்வுகள் முடிந்த உடன் வகுப்புகள் தொடங்குவது என்பது சாத்தியமில்லாதது.
 பல பல்கலைக்கழகங்கள் இடைவெளி இன்றி காலை மற்றும் மாலையில் தொடா்ச்சியாக பருவத் தோ்வுகளை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தச் சூழலில், உயா் கல்வித் துறையின் பருவத் தோ்வுகள் குறித்த தன்னிச்சையான அறிவிப்பு குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றாா்.


 இதுகுறித்து உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியது:
 கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அல்படுத்தப்பட்டு வரும் இந்த ஊரடங்கு மேலும் எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பதைக் கூற முடியாது.
 எனவே, முதல்வருடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு, பல்கலைக்கழகப் பருவத் தோ்வை அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


 2020-21 கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக, முதலில் பருவத் தோ்வுகள் விடுமுறையின்றி நடத்தப்படும். தோ்வு முடிந்ததும், அடுத்த நாளே வகுப்புகள் தொடங்கப்பட்டு விடும் என்றாா் அவா்.

JOIN KALVICHUDAR CHANNEL