. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 May 2020

10,11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் பேருந்து வசதி செய்து தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்)தேர்வுகள்
* காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி நேரம் நடக்கும்.

* பொதுத் தேர்வில் வழங்கப்படும் 15 நிமிட நேரம் இந்த தேர்விலும் ஒதுக்கப்படும்.

சென்னை: கொரோனா பாதிப்பு தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாடே முடங்கியுள்ள நிலையில் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சொந்த ஊர் சென்ற மாணவர்கள் தேர்வு எழுத திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி  முடிய இருந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது.

இதனால் மே முதல் வாரத்தில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எதிர்பாராத வகையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளதால் மேலும் தேர்வுகளை ஒத்தி வைப்பது பிரச்னையாகி விடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் 19ம் தேதி தொடங்கிய நிலையில் அந்த பணியும் பாதியில் நின்றது. தற்போது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளையும் மே 27ம் தேதி தொடங்க அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி  முதல் 12ம் தேதி வரை நடக்கும்.  பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில்
மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு  ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல 34 ஆயிரத்து 842 மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு  ஜூன் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும். தற்போது ஜூன் மாதம் நடக்க இருக்கும் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்படும். சுகாதார நடவடிக்கைகளும் செய்யப்படும். பாதுகாப்பும் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து பணிகளும் செய்யப்படும். இந்த தேர்வு காலத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்காமல் இருந்தால், முதல்வரிடம் அனுமதி பெற்று 3வது வாரம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் எழுதுவார்கள். அதனால் அவர்களுக்கான தேர்வு மையங்கள், இட வசதி அதிகமாக உள்ளது.

காரணம், தற்போது பள்ளிகள் காலியாகத்தான் இருக்கிறது.  தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தமிழக அரசு 218 கோடி ஒதுக்கியுள்ளது. எந்த பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்தால் துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படும். நீட் பயிற்சி அளிப்பதற்காக 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இரண்டு வார பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தால் அடுத்த வாரம் முதல்வர் ஒப்புதல் பெற்று ஆர்வம் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் தங்கும் வசதி, உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பெற்றோர் அச்சம்: சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை முடிந்து, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எங்கு செல்வார்கள். அவர்களை எப்படி அழைத்துச் செல்வர்.

அங்கு தேர்வு நடத்தப்பட இருந்தால், பள்ளியை எப்படி தூய்மைப்படுத்த போகிறார்கள். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் சென்னையில் உள்ள மாணவர்கள், பெற்றோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்த மாணவர்கள் எப்படி இங்கு வந்து தேர்வு எழுத முடியும். மேலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் எப்படி பள்ளிக்குச் செல்ல முடியும். வாகனங்கள் இல்லாமல் பல லட்சம் மாணவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள் என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை பெற்றோர் எழுப்பியுள்ளனர். இதனால், ஊரடங்கு முடிவதற்கு முன் தேர்வு நடத்தப்படுவது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.    

விடைத்தாள் திருத்தும் தேதியில் குளறுபடி
விடைத்தாள்  திருத்தும் பணிகளுக்காக, கல்வித்துறை இயக்குநரால் அறிவிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் தேதிகள் மாற்றி அட்டவணை வெளியிடப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். 10ம் வகுப்பு  விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 16ல் துவங்கி 23ம் தேதி வரை 7 நாள் நடைபெற  வேண்டும். ஆனால் அட்டவணையில் தவறுதலாக ஜூலை 23 வரை நடைபெற உள்ளதாக தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தேர்வு முடிவு வெளியிடும் பணி நடைபெறும் நாட்கள் ஜூலை 24 முதல் ஜூலை 4ம் தேதி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24 முதல் என்பதுதான் தவறுதலாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சிறப்பு பஸ்
கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் அழைத்து வந்து திரும்ப வீட்டிற்கு கொண்டு சென்று விட பேருந்து வசதிகள் செய்யப்படும். மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் தேர்வு அறைக்கு அழைத்து வர பஸ் வசதி செய்யப்படும்.  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்காக அங்கேயே தேர்வு ைமயம் அமைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள்  பொதுத்தேர்வு எழுதும் 10 மாணவர்கள் இருந்தாலும் அந்த பகுதியில் தேர்வு  மையம் உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.  

தேர்வு அறையில் மருத்துவத்துறை அறிவுரையின்படி மாணவர்களுக்கு போதிய இடைவெளி விடப்படும். அதே போன்று தேர்வு எழுத வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். இதனால் மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தேதி    பாடம்
ஜூன் 1    மொழிப்பாடம்
ஜூன் 3    ஆங்கிலம்
ஜூன் 5    கணக்கு
ஜூன் 6    விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8    அறிவியல்
ஜூன் 10    சமூக அறிவியல்
ஜூன் 12    தொழிற்கல்வி

Source Dinakaran