. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 May 2020

இ-பாஸ் வழங்குவதில் புதிய நடைமுறை அமல்


கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ, மற்றொரு மாநிலத்திற்கோ எளிதில் செல்ல முடியாது.

இதற்கு காரணம் ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் போலீசார் நிறுத்தப்பட்டு மாவட்ட எல்லையை தாண்டி வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னர் தான் அனுமதிக்கிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பித்து பெறப்படும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே போலீசார் அனுமதிக்கிறார்கள்.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழங்கும் அந்த இ-பாசில் பயணம் செய்பவர்களின் பெயர், புறப்படும் மற்றும் சேரும் இடம், நாள், என்ன காரணத்துக்காக செல்கிறார்கள், பயணம் செய்யும் வாகன எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் தான் அனுமதிக்கப்படுகின்றன. இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில் இ-பாஸ் வழங்குவதில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மருத்துவ சிகிச்சை, திருமணம், வெளிமாநில தொழிலாளர்கள், இறப்பு ஆகிய காரணங்களுக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணத்துக்கு ஒருவர் கோவையில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்ல வேண்டுமென்றால் அவர் கோவையில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருப்பார். அந்த நபர் அளித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் முன்பு கோவை கலெக்டரே அனுமதி வழங்கி விடுவார்.

ஆனால் புதிய நடைமுறையின்படி சென்னை கலெக்டர் தான் அனுமதி வழங்க முடியும். கோவை கலெக்டர் அனுமதி வழங்க முடியாது. .

இதே போல ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்வ வேண்டுமென்றால் நாம் ஆன்லைனில் சென்னைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நாம் அளிக்கும் ஆவணங்களை சரிபார்த்து சென்னையில் உள்ளவர்களே இரு மாநிலத்துக்கும் சேர்த்து அனுமதி வழங்கி விடுவார்கள்

உதாரணத்துக்கு ஒருவர் கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்ல வேண்டுமென்றால் சென்னைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னையில் உள்ளவர்கள் கோவையிலிருந்து தமிழக எல்லையான வாளையாறு வரை செல்வதற்கும், வாளையாறில் இருந்து பாலக்காடு செல்வதற்கும் தனித்தனி அனுமதிகளை ஆன்லைனிலேயே சென்னையில் உள்ளவர்கள் வழங்கி விடுவார்கள்.

இந்த புதிய நடைமுறை எதற்கு வந்தது என்றால், இ-பாஸ் வாங்கும் சிலர் பொய்யான காரணத்தை சொல்லி சென்று விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதை தடுக்கத் தான் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏனென்றால் என்ன காரணத்துக்காக எங்கு செல்கிறோமோ என்பதை நாம போய் சேரும் இடத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தினர் தான் சரிபார்த்து உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். அந்த காரணம் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி விடுவார்.

ஆனால் பழைய முறையின்படி இது சாத்தியமில்லை. எனவே தான் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.