என்எம்எம்எஸ் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித்தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு பிப்.21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்து உள்ளனா். தொடா்ந்து தோ்வுக்கான நுழைவுச்சீட்டு தோ்வுத்துறை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது. இவற்றை மாணவா்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தோ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.