. -->

Now Online

FLASH NEWS


Thursday 15 April 2021

கரோனா 2-வது டோஸ் தடுப்பூசியை கண்டுகொள்ளாத மக்கள்; 10% கூட திரும்பவரவில்லை

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.


தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட யார்  வேண்டுமானாலும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாக முன்களப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட முக்கியத் துறையில் பணியாற்றுவோர் நிச்சயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைப் போலவே தடுப்பூசியைப் பார்த்தும் அச்சம் கொள்பவர்களும், இரண்டு டோஸ்களைப் போட்டுக் கொள்ள வேண்டுமே என்று அஞ்சுபவர்களும் உண்டு. ஆனால், முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஏன் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதில்லை என்பதுதான் தற்போதைய கேள்வியே.

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது முதலே, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களுக்கு சற்று தயக்கம் இருந்தாலும், எந்த ஆபத்தும் இல்லை என்பதால் பலரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளத் தொடங்கினர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் பழனிசாமி வரை அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர், நடிகைகளும், முக்கியப் பிரமுகர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இதனால், நாளுக்கு நாள் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி மையங்களை அதிகரித்து, விடுமுறை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், இதுவரை நாடு முழுவதும் 11 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33.13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். இதில் 28.77 லட்சம் பேர் முதல் தவணையையும், 4.36 லட்சம் பேர் இரண்டாவது கரோனா தடுப்பூசி தவணையையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த, தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து கரோனா தடுப்பூசி முகாம்களை அதிகரித்துள்ளன. 

ஒருபக்கம் கரோனா வைரஸ் அதிகரித்து வந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த, மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் முகாம்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டாவது தவணையை போட்டுக் கொள்ள முன்வரவில்லை என்பதுதான்.

அதாவது, கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி இன்றுடன் மூன்று மாத காலம் முடிகிறது. ஆனால், இதுவரை முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே இரண்டாவது கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இது நாடளவில் என்றாலும் சரி, தமிழகத்தில் என்றாலும் சரி.. ஒன்றுபோலவே உள்ளது. விகிதத்தில் வேண்டுமானால் லேசான மாறுபாடு இருக்கலாம்.

அதாவது, நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 11.44 கோடி பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 10.01 கோடிப் பேர் முதல் தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் வெறும் 1.43 கோடிப் பேர்தான் 2-வது தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், இதுவரை ஒட்டுமொத்தமாக 41.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 36.41 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 4.69 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 1 கோடிப் பேர் கரோனா தடுப்பூசி முதல் தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 10.86 லட்சம் பேர் மட்டுமே இதுவரை 2வது தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முன்னணியிலிருக்கும் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. 

ராஜஸ்தானில் 89.97 லட்சம் பேர் முதல் தவணையை செலுத்திக் கொண்ட நிலையில், இதுவரை வெறும் 12.27 லட்சம் பேர்தான் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்திலும், குஜராத்திலும் தலா 86 லட்சம் பேர்  முதல் தவணையை செலுத்திக் கொண்ட நிலையில், முறையே 14 லட்சம், 12 லட்சம் பேர்தான் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி முதல் தவணையை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டும் பொதுமக்களுக்கு, இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதில் என்ன தயக்கம் இருக்கிறது என்பதுதான் இதுவரை மத்திய, மாநில அரசுகளால் விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி செலுத்தும் போதே, இரண்டாவது டோஸ் எப்போது போடப்பட வேண்டும் என்று மருத்துவமனைகளிலேயே அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், நாம்தான் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோமே, கண்டிப்பாக இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ன? என்ற தெளிவின்மை ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

கரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்ற செய்திகள், மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள காத்திருக்கும் மக்கள் கூட்டம், ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் தடுப்பூசி போடும் முறை  உள்ளது. இதுபோன்றவற்றாலும் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமலிருக்கலாம்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நாட்டில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டால்தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான நோக்கமே நிறைவேறும்.

முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு குறிப்பிட்ட இடைவெளியில், இரண்டாவது கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். 2வது தவணை செலுத்திக் கொண்டு, 14 நாள்களுக்குப் பிறகுதான் உடலில், கரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றல் உருவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே வேளையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கரோனா தொற்று பரவும். ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பது இதுவரை மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

எனவே, காரணங்கள் எத்தனை இருந்தாலும், முதல் தவணை போட்டுக் கொண்டவர்கள் கட்டாயம் இரண்டாவது தவணையையும் போட்டுக் கொள்வதுதான் கரோனாவிலிருந்து முற்றிலும் காக்க உதவும். முதல் தவணையை எத்தனை உத்வேகத்துடன் போட்டுக் கொண்டார்களோ, அதே உத்வேகத்துடன் இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட வேண்டும் என்பதை ஏற்கனவே போட்டுக் கொண்டவர்களும், தடுப்பூசி போட வேண்டியவர்களும் நினைவில் கொள்வது நல்லது.
Source Dinamani