தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 4 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தபால் வாக்குகளை ஏற்கனவே செலுத்திவிட்டனர். இன்னும் சில ஆயிரம் பேர் மட்டுமே தபால் வாக்குகளை செலுத்த வேண்டியுள்ளது.
தபால் வாக்குகளை செலுத்துவதற்கு முன்பாக அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள், அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். இந்த சான்றொப்பத்தை பெற்றுய் தபால் ஓட்டுகளை அடுக்கல் வழியாகவோ அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திலோ கொண்டு சேர்க்கலாம்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு வரை தபால் வாக்குகளை சமர்ப்பிக்கலாம். இந்தநிலையில் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு முன்பாக தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தபால் ஓட்டுகளை சமர்ப்பிக்க இன்னும் 3 நாட்கள் அவகாசம் உள்ளன.
அதற்குள் தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.