கரோனா பரவல் அதிகரித்துள்ளதாலும், கோடை வெப்பம் அதிகரிப்பாலும் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளித்து கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநருக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் இந்தக் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செ. பால்ராஜ் அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் 50 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு சென்று வருகிறார்கள்.
தற்போது 2-வது அலை மிககடுமையாக அதிகரித்து வருகிறது. இன்னும் 2, 3 வாரங்களுக்கு நோய் தொற்று பரவல் மிக அதிகமாக இருக்கும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிக்குப்பின் பல்வேறு ஆசிரியர்கள் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருசில ஆசிரியர்கள் மரணமடைந்துள்ளனர்.
தற்போது பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடிவதில்லை. எனவே பேருந்துகளில் பள்ளிகளுக்கு சென்று வருவதில் மிகுந்த சிரமம் உள்ளது. குறிப்பாக பெண்ணாசிரியர்கள் மிகுந்த அச்சத்துடனும் ஒருவித மனஉளைச்சலுடனே சென்று வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகிறது.
ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த ஓராண்டாக கல்வியாண்டு முழுமைக்கும் மாணவர்கள் வருகை இல்லை.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கரோனா நோய்தொற்று தாக்கம் குறையும்வரை பள்ளிகளுக்கு செல்வதில் இருந்து ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஏப்ரல் 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.