ஒரு வசதியான குடும்பத்தில் இரண்டு ஆண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக பெண் குழந்தை பிறக்கின்றது.
நீ பிறந்த பிறகு தான் இந்தக் குடும்பத்திற்கு வறுமை வந்தது. நீ ராசி இல்லாதவள் என்று சொல்லியே அவளது மூத்த அண்ணனும் அவனது மனைவியும் நோகடிக்கின்றனர்.
பெண்ணிற்குத் திருமண வயது... இவளைக் கடை வீதியில் பார்த்த ஒரு நடுத்தர வாலிபன் கண்ணியமான முறையில் பெண் கேட்டுத் திருமணம் செய்து கொள்கிறான்.
என்ன தான் அவள் குடும்பப் பெண்ணாக இருந்தாலும் "ராசி இல்லாதவள்" என்ற மனஅழுத்தம் மட்டும் அழியாமல் தொடர்கிறது...
கணவன் வேலைக்குச் செல்லும் போது, எதிரே நிற்க மாட்டாள். வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முன்னே நிற்க மாட்டாள் இதையெல்லாம் கவனித்த கணவன்...
நீ ஏன் இப்படி இருக்கிறாய் ?! நீ என் மனைவி. என் உணர்வில் பாதி. என்று கணவன் கேட்க... என்னை மன்னித்து விடுங்கள், நான் "ராசி இல்லாதவள்" என்று சொல்லி அழுகிறாள்.
வருடங்கள் கடக்கிறது... கணவனுக்குத் தொழில் சிறந்த முறையில் நடைபெறுகிறது. புதிதாக வீடு ஒன்று வாங்கினான். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு உறவினர்கள் அனைவரும் வருகின்றனர்...
வழக்கம் போல், மூத்த அண்ணன்
சந்தேகப்படுகிறார்.. தங்கச்சி கணவனிடம்.. "புதையல் ஏதாவது கிடைத்ததா! என்றார். ஆமாம் உங்கள் தங்கை எனக்குப் புதையலாக கிடைத்தாள் என்றான் திமிராக.
அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டு, "நான் இப்போது நல்லா இருக்கக் காரணம் என் மனைவி வந்த ராசி தான்." என்றான்.
இப்படி ஒரு வார்த்தை யாரும் சொல்லிக் கேட்காதவள் சடார் என்று கணவனின் மார்பில் தனது முகத்தைப் பதித்து அந்த வீடே அதிரும் அளவிற்கு ஓஓஓ என்று கதறி அழுகிறாள். ஆமாம் அவள் மனதில் அப்படி ஒரு..."மன வலி".
மனைவி அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவள் கண்ணீரை வேகமாகத் துடைத்துத் தன் மார்போடு அவளை அணைத்துக் கொண்டு...
இன்னும் சத்தமாக...
என் மனைவி என்னுடன் இருக்கும்
வரை எனக்கு எப்போதுமே "ராசி"
தான் என்கிறான்.
இறுமாப்புடன், அவளது
பார்வை அண்ணனின் மீது...
நண்பர்களே,
*தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்*
*ஆறாதே நாவினாற் சுட்ட வடு*
- *திருவள்ளுவர்* .
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின் மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப் போய் விடும். ஆனால் கொடிய. வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.