முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின் பற்றுதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.
கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 94 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்களப் பணியாளர்கள், போலீசார் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பின் போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டார்கள். தற்போது அவர்களை மீண்டும் இந்த பணிகளுக்கு அழைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களின் சுமையை குறைக்க ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின் பற்றுதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.
இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் விவரங்களையும் அவர்கள் அறிந்து தகவல் கொடுப்பார்கள். மேலும் தடுப்பூசி போடப்பட்டதன் விவரங்களையும் ஆசிரியர்கள் சேகரிப்பார்கள்.
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். அவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்புப் பணியில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பால் பிளஸ்-2 பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் தங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி அரசுக்கு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.
Source Maalaimalar
