துறவியராயினும்
தீண்டலைக்
கடக்காமல் வாழ்தலரிது!
தீண்டலில் ஒருவழிப் பாதையும் உண்டு!
இருவழிப் பாதையும் உண்டு!
கொடுத்தல் ஒருவழியெனில்
கொடுத்தலோடு பெறுதல் இருவழி!
பிறந்தது முதல் இறப்பது வரை எத்தனையெத்தனைத்
தீண்டல்கள் அனைவருக்கும்?
அவற்றுள்
இந்த ஐவகைத் தீண்டலோ பெரும்பான்மை வகிக்கும்!
நிலம் நீர் காற்று
நெருப்பு வான் என்ற ஐந்தின் தீண்டலே நம்வாழ்வை நடத்தும்!
நிலமென்ற மண்ணின் தீண்டல்
அன்னையின் தீண்டலுக்கு ஒப்பாகும்!
வெறுங்காலுடன் நடக்கையில் நிலத்தின் தீண்டல்
இருவழிப்பாதையாய்
நுகர்கிறோம்!
ஆயிரம் மெத்தையில் படுப்பதை விடவும் வெறுந்தரையில் படுத்துப் பாருங்கள்!
நிலத்தின் தீண்டல்
புரியும்!
அடுத்து
நீரின் தீண்டல்!
கடற்கரையில் அலைகளின் தீண்டல்!
கார்காலத்தில் மழைநீரின் தீண்டல்!
நித்தமும் குளியலில் மேனிமுழுவதும் நீரின் தூண்டல்!
நீர்நிலைகளில் முங்கி எழுகையில் நீரின் ஆனந்த தீண்டல்!
நீரின் தீண்டலுக்கு கோடிகோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது!
அடுத்து காற்றின் தீண்டல்!
கிழக்கில் கொண்டலாய்த் தீண்டும்!
மேற்கில் கோடையாய்த் தீண்டும்!
வடக்கில் வாடையாய்த் தீண்டும்!
தெற்கில் தென்றலாய்த் தீண்டும்!
காற்றின் தீண்டலில் உயிர்ப்புகள் மலரும்!
புயலாய்த் தீண்டினால் விரும்பாரேது?
அடுத்து நெருப்பின் தீண்டல்!
சுட்டிடும் நெருப்பைத் தீண்டுவாருண்டோ?
நெருப்பின் தீண்டலை அறியாதோருமுண்டோ?
தீச்சட்டி ஏந்தலும் தீமிதித்தலும்
செய்பவர் உணர்வர் தீயின் தீண்டலை!
காய்ச்சல் அடிக்கையில் அனலை உணர்வோம் தொடுகையிலே!
உணர்வுகளின் கொந்தளிப்பில் தீயின் அவதாரம் நம்முள் மூளும்!
இறுதியாக
வானத்தின் தீண்டல்!
இதில்தான் பலவகை!
பகலில் ஞாயிற்றொளியாம்
வெயிலின் அனல்தீண்டல்!
மேகம் கருத்தால்
மழையாம் நீரின் குளிர்த்தீண்டல்!
மேகம் இடிக்கையில்
ஒலித்தீண்டல்!
மற்றும் ஒளித்தீண்டல்!
மின்னலின் ஒளித்தீண்டல் உயிரையே விலைபேசும் தீண்டலாம்!
உயிர் வாழ்பவர்கள்
இடையே தவறான முடிவெடுத்து
உயிரை மாய்த்துக் கொள்வதிலும் நீர்த்தீண்டலும்
நெருப்புக்தீண்டலும்
முந்தி விடுகின்றன!
இறந்த பின்னும்
உடல் புதைக்கப் பட்டால் நிலத்தின் இறுக்கத் தீண்டல்!
சில உடல்கள் எரிக்கப் படும்.அப்போது சூழுமே நெருப்பின் ஆதிக்கத்தீண்டல்!
அப்பப்பா!
பெரிதினும் பெரிதே ஐவகைத் தீண்டல்!
த.ஹேமாவதி
கோளூர்