. -->

Now Online

FLASH NEWS


Friday 18 June 2021

ஆன்லைன் மோசடி புகாரளிக்க ‘155260’ உதவி எண் வெளியீடு: சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் தகவல்

ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க 155260 என்ற உதவி எண் தொடங்கப்பட்டு 2 மாதத்தில் ரூ. 1.85 கோடி முறைகேடுகளில் இருந்து தப்பியது. அனைத்து முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகின்றன.


பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கூட பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை உறுதி செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அதன்படி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிக்க தேசிய உதவி எண் ‘155260’ அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்று சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த உதவி எண் வசதியை, ரிசர்வ் வங்கி, அனைத்து முக்கிய வங்கிகள், கட்டண வங்கிகள், வாலெட்டுகள் மற்றும் ஆன்லைன் வணிகர்களின் ஆதரவுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

155260 உதவி எண் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் ரூ. 1.85 கோடி மதிப்புடைய மோசடி செய்யப்பட்ட பணம் (டெல்லியில் ரூ. 58 லட்சம், ராஜஸ்தானில் ரூ. 53 லட்சம்), மோசடி பேர்வழிகளின் கைகளுக்கு சென்றடையும் முன் மீட்கப்பட்டுள்ளது. தேசிய உதவி எண்ணை பொறுத்தமட்டில், தொடர்புடைய மாநில காவல்துறையால் இயக்கப்படும்.

ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அழைத்தவரின் பரிவர்த்தனை தகவல்கள் மற்றும் அடிப்படை தனிப்பட்ட தகவல்களை குறித்து கொள்ளும் காவல் துறையினர், சைபர் மோசடி தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் டிக்கெட் முறையில் புகாரை பதிவு செய்வார். அது, தொடர்புடைய வங்கிகள், வாலெட்டுகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு சென்றடையும். ஒப்புகை எண்ணோடு எஸ்எம்எஸ் ஒன்று பாதிக்கப்பட்ட நபரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். அதன் மூலம் தேசிய சைபர் குற்றங்கள் தகவல் தளத்தில் (https://cybercrime.gov.in/) 24 மணி நேரத்தில் மோசடி குறித்த முழு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

மோசடி செய்யப்பட்ட பணம் வங்கியில் இன்னும் இருக்கும் பட்சத்தில், அதை மோசடிதாரர் எடுக்க முடியாத படி வங்கி செய்யும். பணம் மற்றொரு வங்கிக்கு சென்றிருந்தால், அந்த வங்கிக்கு தகவல் அனுப்பப்படும். இதன் மூலம் மோசடி கும்பலின் கைகளுக்கு பணம் சென்றடைவது தடுக்கப்படும் என்று, உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.