தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கணிப்பில் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.- - பள்ளி கல்விதுறை தகவல்!!!
சென்னை,கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 மாநில வாரிய பொதுத்தேர்வு நடத்தப்படுமா? நடத்தப்படாதா? என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடையே எழுந்தது.இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்க, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று சுற்றறிக்கை விடப்பட்டு இருக்கிறது.
அதில், கொரோனா தொற்று காரணமாக 2020-21-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்பட இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வருகிற 7-ந்தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை இணையவழியாக இன்று தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, முதல் நாளான இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாக பலரும், எதிராக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் கல்வியாளர்கள், பெற்றோர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாளையும் அனைத்துத் தரப்பினரிடமும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படவுள்ளன.அனைத்துத் தரப்பினரும் கருத்து தெரிவிப்பதற்காக தனி மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மின்னஞ்சல் முகவரி, 14417 என்ற தொலைபேசி உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
