கோவிட் 2வது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. அதில், இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. ஏராளமானோர், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கடந்த நூற்றாண்டில் பெரிய பேரிடராக இது அமைந்துள்ளது. நவீன உலகம் கோவிட் போன்ற ஒரு பேரிடரை கண்டதில்லை.
மருத்துவமனைகள் அமைப்பதில் விரைவாக செயல்பட்டோம். புதிய சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம் . ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தேவை கணிக்க முடியாத அளவிற்கு ஏற்பட்டது. ரயில் விமானம் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது.போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம். மக்களுக்கு உதவ முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டன. அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி வேகமாக அதிகரிக்கப்பட்டது. கோவிட் பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5 ஆண்டுகளில் வலுப்படுத்தி உள்ளோம்.
மனித குலத்திற்கு கோவிட் மிகப்பெரிய எதிரி. கோவிட்டிற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மிக அவசியம். கொரோனாவை தடுக்க தடுப்பூசி தான் ஒரே பேராயுதம். உலகில் ஒருசில தடுப்பூசி நிறுவனங்களே உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் பலரை காப்பாற்றி உள்ளோம். ஒரே ஆண்டில் இரு தடுப்பூசிகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் கண்டுபிடிக்காமல் இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். 2வது அலையை எதிர்த்து போராட தடுப்பூசி தான் உதவியது. ஆரம்பத்தில் நமது தடுப்பூசி இயக்கம் மெதுவாக செயல்பட்டது. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய துயரத்தை கோவிட் ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்காக சில தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தனது குடிமக்களை இந்தியா எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி பல நாடுகளில் எழுந்தது. இந்தியா குறித்த உலக நாடுகளின் சந்தேகத்திற்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். உலகத்துடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என்பதை நமது விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இன்று வரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது விஞ்ஞானிகள் மீது இந்தியா நம்பிக்கை வைத்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டில் கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளது. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கோவிட் தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும்.
தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கப்படும். தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றினர். மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. இவ்வாறு பிரதமர் பேசினார்.
தடுப்பூசி மற்றும் ஆராய்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் 2 தடுப்பூசிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. வர உள்ள நாட்களில் தடுப்பூசி விநியோகம் பல மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவில் 7 நிறுனங்கள் ஈடுபட்டு உள்ளன. உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி பெற்று செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்கள் ஊரடங்குகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டி வருகிறது. ஊரடங்கில் மாநிலங்கள் தளர்வு அளித்த போதும் மத்திய அரசு வழிகாட்டுகிறது. தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும். தடுப்பூசி கொள்கையை, மாநிலங்களுக்கு ஏற்கனவே வகுத்தளித்துள்ளோம். மாநிலங்களின் தடுப்பூசி தேவையை அறிந்திருக்கிறோம். அதனை பூர்த்தி செய்வோம். தடுப்பூசி கொள்கையில் தளர்வு வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. அதனை மத்திய அரசு ஏற்று கொண்டு உள்ளது. நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்கவில்லை என மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுக்கு வகுத்துள்ள விதிகளின் படியே தொடர்ந்து செயல்படுகிறது.
அரசியல் செய்கிறார்கள்
தடுப்பூசி இயக்கம் தொடர்பாக சிலர் அரசியல் செய்கிறார்கள் அது கண்டனத்திற்குரியது. தடுப்பூசி கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் வைக்கப்படுகின்றன.கேள்வி எழுப்பபவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நமது குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது எங்களது விருப்பம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் முக்கியம். அதில், சமரசமில்லை.
மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வினியோகத்தில் இனி மத்திய அரசே முடிவெடுக்கும். தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்கு செலவு செய்ய தேவையில்லை.
தடுப்பூசி திட்டத்திற்காக 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும். மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம். 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும். ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க துவங்கும். அதேபோல், மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசிகள் கொள்முதல் செய்யத் தேவையில்லை. ஏழைகள், நடுத்தர மற்றும் மத்திய தர மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து தடுப்பூசிகளும் இந்திய அரசால் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி
தீபாவளி வரை 80 கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்
தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளுக்கு சேவை கட்டணமாக ரூ .150 மட்டுமே வசூலிக்க வேண்டும்
நவம்பர் மாதம் தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேசன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். இதன்மூலம் 80 கோடி பேர் பயன்பெறுவர்.பல இடங்களில் கோவிட் குறைந்து வருகிறது. அங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
