ஆணா? பெண்ணா? அரவாணியா?
அக்கரையிருந்ததில்லை இவர்க்கு!
கருபிண்டமா? குழந்தை யா?
கவலையிருந்ததில்லை இவர்க்கு!
இளமையா ?முதுமையா?
இம்மியளவும் பாதிப்பில்லை இவர்க்கு!
வளமையா? நடுமையா? ஏழ்மையா?
வன்மம் வளர்ந்ததில்லை இவர்க்கு!
விழித்திடமுடியா உறக்கத்தில் சேர்ந்து
விடைகொடுக்க முடியா இயலாமையில்
மண்ணுக்கு உரமாவதா?- இல்லை
மன்னும் தீயலைக்கு ஆகுதியாவதா?
எனும் முடிவில்லா பட்டிமன்றத்தின்
ஏற்றதொரு முடிவானவரின்
இறுதிக்கணக்கை தொடங்கிவைக்கும்
இறுதிச்சடங்கின் ஆரம்பப்புள்ளியிவரே
*போனகணக்கின் ஆனகணக்குக்கு*
பணம்வாங்கி வேலைசெய்தவர்கள்!
செல்பவரை சிறப்புற வழியனுப்பி
வருபவரால் தன் வருமானம்
சீர்படுமாவென காத்திருந்தவர்கள் !
ஒன்றரையாண்டு முடிவின்றி போக எடுத்ததடமழியும் முன் வைத்தது வேக..
எழும்வியர்வையழிக்கவும் மனதின்றி
கடிகார ஓட்டத்துக்கு ஈடுதர ஓடினர்!
காலைவந்தவர்வரிசைஎண் தேடினர்!
வேகக்கொடுத்த உடல் தின்ற தீயும்
வியர்த்து இளைத்து துடித்திட....
அடுத்த உடல் வரிசைகட்டி நின்றதே!
கொடுந்தொற்று விளைவித்த பயத்தால்
காடுவரை பிள்ளைவர கொடுப்பினை இல்லை!
வாழும்போது செய்த தர்மமும் துணை வரவில்லை!
*அனாதைசாவுகள் இன்றைக்கு
சாவினால் அனாதைகளானது*
இருந்தபோதும் இவர்கள் எழுந்தார்கள்!
*இடுகாடானாலும் சுடுகாடானாலும்
எம் கடன் உமக்கு இறுதி நிறைவேற்ற* சீரிய எண்ணம் கொண்டனர்இறந்தவர்
சீரானமரியாதை பெற்று தகனிக்க!
சீக்கிரத்தில் செயலாற்றினர்
ஒன்றா இரண்டா தீக்குளியல்?
ஒன்றுக்கு பத்தும் ஐம்பதுமாய்....!
ஆவிநீத்தவர் உடல் பொட்டலமாய்!
ஆர் வந்தும் தீண்டா நிலையில்....
இவர் மாலை சூட்டி வாய்கரிசி போட்டு
இன்னலின்றி தீ முழுக்காட்டுகின்றார்!
அடுத்த உடல் வரும்முன்னே
அஸ்தியை கலயத்தில் அள்ளுகிறார்!
ஓய்வெடுக்க நினைத்தாலும்
ஓரியாய் உடல்கள் காத்திருக்குமவலம்!
நீரருந்த நேரமின்றி தன்னுடல் நீர்
பெருக்குகின்றார் விழிநீருடன் சேர்த்து!
பெருகும் நெருப்பும் இடைவேளக்கு
கெஞ்சியழுகின்றது !இவர்தம்நெஞ்சமோ
இறந்துபட்பவர்க்காய் விஞ்சியழுகிறது!
அள்ளிவைத்த சாம்பல் கலயங்கள்
அண்டுவாரின்றி தேம்பியழுகின்றது!
விரக்தியுற்ற இவர்மனமோ
விதிபயன் தருபவனை வேண்டுகின்றது !
ஆண்டவா எங்களையும் கொஞ்சம்
அழவிடு! நெஞ்சார எங்களை அழவிடு!
🌹🌹வத்சலா🌹🌹