. -->

Now Online

FLASH NEWS


Saturday 5 June 2021

திட்டமிடுதலின் அவசியம் - தினம் ஒரு குட்டிக்கதை. பால.ரமேஷ்.


,ஒருவன் சிவனை நினைத்து ஒற்றைக்காலால் நின்று கொண்டு தவம் இருந்தான். சிவனைக் காண பல ஆண்டு காலம் ஆகும் என்று அவன் நினைத்துக் கொண்டு தவம் இருந்தான். 
ஆனால், அவன் தவம் செய்ய ஆரம்பித்து சில நாட்களிலேயே சிவ பெருமான் அவன் முன் தோன்றினார். 
என்ன காரணத்தினால் உன்னை வருத்திக் கொண்டு இப்படி தவம் செய்கிறாய்? உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று அவனிடம் சிவபெருமான் கேட்டார்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யமாக போய்விட்டது. கடவுளே! உங்களை காண பல வருடங்கள் தவம் செய்ய வேண்டும் என்று பலரும் சொன்னார்களே! ஆனால், நீங்கள் இவ்வளவு சீக்கிரமாக எனக்கு காட்சி அளித்து விட்டீர்களே! என்று அவரிடம் கேட்டான். 
இந்தப்பக்கமாக வரும்பொழுது எதிர்பாராவிதமாக உன்னை நான் காண நேர்ந்தது; அதனால்தான் உனக்கு நான் காட்சி கொடுத்தேன் என்ற சிவபெருமான் மீண்டும் அவனைப்பார்த்து, “ உனக்கு என்ன வேண்டும் சொல்! தருகிறேன் என்றார். 
அவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கடவுளே, உன்னிடத்தி்ல் என்ன கேட்பதென்றே எனக்கு தெரியவில்லை ஏதோ ஒரு வேகத்தில் முடிவெடுத்து தவம் செய்ய ஆரம்பித்துவிட்டேனே தவிர என்ன வரம் கேட்க வேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. அதனால்.இன்னும் சில காலம் கழித்து வாருங்கள். அப்போது நான் உங்களிடத்தில் வரத்தை வாங்கிக் கொள்கிறேன் என்றான் அவன். 
அதை கேட்ட சிவபெருமான் பக்தா! நான் இப்போது போனேன் என்றால், எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது. அதற்கு பல ஆண்டு காலம் ஆகலாம். ஆகையால் நான் உனக்கு மூன்று நெல்லிக்கனிகளை தருகிறேன். மனதில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு அவற்றில் ஒரு கனியை உருட்டும்போது நீ நினைத்தது நடக்கும்! அத்துடன் உருட்டிய கனி மறைந்துவிடும்! என்று கூறிய அவர் அவனது கைகளில் மூன்று கனிகளை அளித்துவிட்டு மறைந்தார். 
இவனுக்கு நடந்த சம்பவங்கள் கனவைப்போல் இருந்தது. வந்தது சிவபெருமான்தானா? தந்தது பலிக்கும் வரம்தானா? என்று சந்தேகம் கொண்டான். ஆனால். அவனது கையில் இருந்த கனிகள் நடந்த சம்பவம் உண்மைதான்! என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லியது. 
இருந்தாலும், அதனை சோதிக்க எண்ணினான். அவனது வீட்டுக்கு சென்றான். முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்தான். தவம் இருந்த அவனது முகம் சில நாட்களிலேயே வாடி இருந்தது. 
அவனது மூக்கு இயல்பாகவே சின்னதாக இருக்கும். அதை நீளமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு சிவபெருமான் அளித்த வரத்தை பயன்படுத்தித்தான் பார்ப்போமே! என்று சந்தேகத்துடன் ஒரு கனியை உருட்டினான். 
என்ன ஒரு ஆச்சர்யம்? அவனது மூக்கு நீளமாகிவிட்டது. ஆனால், அவனது மூக்கு ஒரு அடி நீளம் இருந்தது. அவனுக்கே அவனை பார்க்க பயமாக இருந்தது. 
பயத்துடனும், படபடப்புடனும் மீண்டும் ஒரு கனியை உருட்டி எனது மூக்கு சின்னதாக வேண்டும் என்று நினைத்தான். அவனது மூக்கு மிகச்சிறியதாக போய்விட்டது. 
இயல்பாக இருந்ததைவிட மிக அசிங்கமாக அவனது மூக்கு இருந்தது. மீண்டும் பதட்டப்பட்டான், பயத்துடன் அவனது கையில் இருந்த கடைசி கனியை உருட்டி இயல்பாக இருந்தது போல் எனது மூக்கு மாறினால் போதும்! என்று நினத்தான். 
வரத்தை வாங்குவதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி அவனது மூக்கு மாறியது. அவன் நிம்மதி அடைந்தான். 

 *கதையின் நீதி:* 

 *எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.* *இல்லையென்றால், இறைவனே உங்களுக்கு வரம்* *அளித்தாலும் பயன் இருக்காது.*