ஊருக்கு வெளியிலோ பிழைப்புக்காய் நகரிலோ
வசித்துக் கொண்டிருப்பார்கள் வந்தும் போவார்கள்
திருவிழாக் காலத்தில் திருமண நிகழ்ச்சியில்
தவறாமல் இருப்பார்கள் உறவாடி மகிழ்வார்கள்.
வருடத்தில் குறைந்தது ஒருமுறை யாவது
விருந்தாக வருவதும் போவதும் நிகழ்ந்தது
தூரமாய் இருந்தாலும் பாரமாய் நினைக்காது
ஓரமாய் ஒதுங்காது ஒன்றென்றும் என்றார்கள்.
கூட்டுக் குடும்பமென்ற கூடுகள் கலைந்ததும்
வீட்டுக்கு இருவரென்ற எண்ணங்கள் வளர்ந்ததும்
உறவுகள் மறந்திட விலகியே இருந்திடக்
காரணம் ஆனது கதையாகிப் போனது.
என்னதான் உறவு எப்படித்தான் அழைப்பது
எதுவுமே தெரியாமல் அருமையும் புரியாமல்
உரிமையும் இல்லாமல் சிரமங்கள் சூழவே
வாழ்கிறது தலைமுறை இன்றைய தலைமுறை.
அதுதானே வேதனை அடங்காத வேதனை.
*கிராத்தூரான்*